×

திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீட்டை பின்பற்ற அரசாணை வெளியீடு ..

சென்னை : திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தின்,  மாணவர் சேர்க்கையில் 2022-23ம் கல்வியாண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்றிட அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், தேசிய அளவிலான மிகச் சிறந்த சட்டக்கல்வி வழங்கும் பொருட்டு, 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மாநிலச் சட்டம் மூலம் திருச்சிராப்பள்ளியில் தோற்றுவிக்கப்பட்டு 2013-2014-ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதில் தற்சமயம் 521 மாணவர்கள் சட்டக் கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையானது பொது சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வு (Common Law Admission Test - CLAT) மூலம் நடைபெறுகிறது. இந்த பல்கலைக்கழகத்திற்கென ஒப்பளிக்கப்பட்ட மொத்த இடங்களுள் 45 இடங்கள் தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களாலும் (Resident students of Tamil Nadu), 50 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் (All India Quota) அடிப்படையிலும் மற்றும் 5 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI Quota) ஒதுக்கீட்டின் கீழும் பூர்த்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டினை வசிப்பிடமாக கொண்ட மாணவர்களுக்கான  இடங்களைப் பொறுத்தமட்டில், அவை தமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீட்டு கொள்கையினைப் பின்பற்றி பூர்த்தி செய்யப்படுகிறது. 50% அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பொறுத்தமட்டில் 15% இடங்கள் பட்டியல் சாதியினருக்கும் (SC) 7.5% இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் (ST) மீதமுள்ள 77.5% இடங்கள் பொதுமுறைப் போட்டியிலும் (Open Competition) பூர்த்தி செய்யப்படுகிறது. இருப்பினும், அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான இடங்களுள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கென தனியே இடஒதுக்கீடு ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே மேற்சொன்ன சூழலை கவனமுடன் கருத்தில் கொண்டு, விரிவான பரிசீலனைக்குப் பின் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான 50% இடங்களையும், தமிழ்நாட்டினை வசிப்பிடமாகக் கொண்ட மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்டு வரும் மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையான 69% (பொது பிரிவு - 31%, பழங்குடியினர் - 1% பட்டியலினத்தவர் - 18% மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 50%)-ஐ போன்றே பின்பற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவின் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கி சமூக நீதியை நிலைநாட்டுவதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களுள் அவர்களுக்கு அதிகபட்சமாக 50% இடங்களை உறுதி செய்து நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு  திகழ்கிறது.  



Tags : Tiruchi Tamil Nadu , Trichy, Law University, Student Admission
× RELATED “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும்...