×

கீவில் தொடர்ந்து முன்னேறும் ரஷ்ய படைகள்..!!: ஒரு மாதத்தில் கீவ் நகரம் ரஷ்யாவின் வசமாகிவிடும்; அமெரிக்கா கணிப்பு

கீவ்: உக்ரைனில் ரஷ்ய படைகள் கோரா தாண்டவம் ஆட தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் கீவ்வில் இருந்து வெளியேறுமாறு ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைனின் எல்லைப் பகுதிகளான டொனட்ஸ்க், லுஹான்ஸ்க்கில் கடந்த வாரம் தொடங்கிய ரஷ்ய படைகளின் தாக்குதல் ஒரு வாரத்திற்குள்ளாகவே தலைநகர் கீவ் வரை நீண்டு விட்டது. கீவ்வை சுற்றி வளைத்து தாக்குதல்கள் நடத்தி வந்த ரஷ்ய வீரர்கள் நகருக்கு உள்ளேயும் குறி வைத்து தாக்க தொடங்கிவிட்டனர். கீவ் மற்றும் கார்கிவில் ஏவுகணைகள், பீரங்கிகள் எந்நேரமும் வெடித்து சிதறிக் கொண்டிருப்பதால், அங்கு குண்டு மழை பொழிகிறது.

குண்டு வீச்சுக்களால் அரசு அலுவலகங்கள், கட்டடங்கள், வாகனங்கள் சின்னாபின்னமாகி சாலைகள், தெருக்கள் சேதக் குவியல்களாகவும், குப்பை மேடுகளாகவும் காட்சி அளிக்கின்றன. கார்கிவில் ரஷ்ய படைகளின் தாக்குதல் கோரதாண்டவமாக மாறியுள்ளது. கீவ்வில் உள்ள தொலைக்காட்சி டவர் மீது ஏவுகணையை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சி நடுங்கும் அளவிற்கு நிலைமை கைமீறி போய்விட்டது. ரஷ்ய படைகளின் தாக்குதலால் கீவ் நகரமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான ராணுவ வாகனங்கள் கீவ்வை  நோக்கி நகர்ந்து விட்டன. பொதுமக்கள் கீவ்வை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா எச்சரித்துள்ளது. இதனால் கீவ்வில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உக்ரைனின் பிற பகுதிகளில் இருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் ரஷ்யா கீவ்வை தனிமைப்படுத்திவிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் கீவ் முழுமையாக ரஷ்யாவின் வசம் சென்றுவிடும் என்று அமெரிக்கா கணித்துள்ளது. இதனால் கீவ்வில் அடுத்தடுத்து என்ன நிகழப்போகிறது என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.              


Tags : Kiev ,Russia ,America , Kiev, Russian Army, Smoke Zone, United States, Tensions
× RELATED உக்ரைனுக்கு எதிராக போர் புரிய ரஷ்யா நிர்பந்தம்