×

பெலாரஸ் படைகளும் உக்ரைனில் நுழைந்தன

ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உடனடியாக இணைக்க வேண்டுமென அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் வீடியோ கான்பன்ரஸ் மூலம் நேற்று உரையாற்றினார். அப்போது, பெலராஸ் படைகள் உக்ரைனில் நுழைந்து ரஷ்யாவுடன் சேர்ந்து போரிட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் அவர், ‘‘மதிப்புகளுக்காகவும், உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும், நீங்கள் அனுபவிக்கும் அதே சமத்துவத்தைப் பெறுவதற்காகவும் நாங்கள் எங்கள் உயிரை தியாகம் செய்து வருகிறோம். நாங்கள் வெல்வோம், யாராலும் எங்களை வீழ்த்த முடியாது. நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் இல்லாமல், உக்ரைன் தனிமைப்படுத்தப்படும்’’ என்றார். ஜெலன்ஸ்கி பேசி முடித்தததும் அனைத்து எம்பிக்களும் எழுந்து நின்று கைதட்டி ஆதரவளித்தனர்.

ஸ்டார் லிங்க் இணைய சேவை உபகரணங்கள் உக்ரைன் வந்தது
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தொலைத்தொடர்பு சேவைகளை முடக்கி உள்ளது. பெரும்பாலான அரசு இணையதங்களை முடக்கி சைபர் தாக்குதல்களை நடத்தி உள்ளது. இதனால், இணையதள சேவைகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உக்ரைனில் இணைய சேவை தங்கு தடையின்றி கிடைக்க, ‘ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை’ வழங்க தயாராக இருப்பதாக கடந்த திங்கள்கிழமை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டரில் தெரிவித்தார். இந்நிலையில், ‘ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை’ பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் (டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்டு) தனது நாட்டிற்கு வந்துள்ளதாக உக்ரைன் அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘நீங்கள் மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள்’ என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த ஐநா.வில் அழுத்தம்
கடந்த 1997ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா பொதுச்சபை அவசர கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பலநாட்டு தூதர்கள் ரஷ்யா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். உக்ரைன் தூதர் செர்ஜி பேசுகையில், ‘‘உக்ரைன் காப்பாற்றப்படாவிட்டால், உலகின் அமைதி காப்பாற்றப்படாது. உக்ரைன் காப்பாற்றப்படாவிட்டால், அடுத்ததாக ஜனநாயகம் தோல்வி அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’’ என்றார். இப்பிரச்னையை நேர்மையான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என இந்திய பிரதிநிதி திருமூர்த்தி பேசினார். அனைத்து நாடுகளின் இறையாண்மைக்கும் சர்வதேச எல்லைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என சீனா கூறியது.

ரஷ்ய டாங்கியை திருடிய விவசாயி: வைரல் வீடியோ
உக்ரைன் போர் தொடர்பான பல வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதில், சோகங்களும் நிறைந்துள்ளன. சுவாரசியங்களும் அடங்கியுள்ளன.  தற்போது, பிரிட்டனை சேர்ந்த எம்பி.யான  ஜானி மெர்சர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சி, குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. போரில் கைவிடப்பட்ட ரஷ்ய டாங்கியை உக்ரைன் விவசாயி ஒருவர் டிராக்டரில் இழுத்து திருடிச்  செல்லும் காட்சிதான் அது. அந்த டாங்கியின் பின்னால் அவர் தலை தெறிக்க ஓடுவது இன்னும் சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது. இந்த வீடியோவை இதுவரை 50 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். ஆஸ்திரியாவில் 2014-2021 வரை உக்ரைன் தூதராக இருந்த அலெக்சாண்டர் செர்பாவும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அணு ஆயுத போர் பற்றி அச்சப்பட வேண்டாம்
உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வரும் நிலையில், அணு ஆயுத படையை ரஷ்ய அதிபர் புடின் உஷார்படுத்தியது உலக அளவில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அணு ஆயுதப் போர் வெடிக்குமா என வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘இல்லை’ என பதிலளித்துள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், ‘‘பல்வேறு பிரச்னைகளில் ரஷ்யாவுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அணுசக்தி பயன்பாடு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளன. ரஷ்யாவுடன் மோதுவதற்கு அமெரிக்காவுக்கோ அல்லது நேட்டோவுக்கோ எந்த விருப்பமும் இல்லை. எனவே அணு ஆயுதம் தொடர்பாக இதுபோன்ற எச்சரிக்கைகள் மிகவும் ஆபத்தானது, தவறான அனுமானங்கள் ஆபத்தை அதிகரிக்கின்றன. இவை தவிர்க்கப்பட வேண்டும். நிச்சயம், நாங்கள் அதில் ஈடுபட மாட்டோம்’’ என்றார்.

எகிறும் எண்ணெய் விலை
போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதால் ஆசிய பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றமடைந்தன. டோக்கியோ, சிட்னி, ஷாங்காய் பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. அதே சமயம், வரத்து குறைந்ததால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

எதிரிகளை கொன்றால் 300 டாலர் பரிசு
ரஷ்யாவுக்கு ஆதரவு அளித்து வரும் பெலராஸ் நாடும் உக்ரைனுக்கு தனது படைகளை அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெலாரஸ் படையினர் உக்ரைனின் செர்னிஹிவ் நகரில் புகுந்துள்ளதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி உள்ளது. எதிரி படைகளை கொல்வோருக்க 300 டாலர் பரிசுத்தொகையையும் செர்னிஹிவ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Ukraine , Belarusian Army, Ukraine,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...