×

உக்ரைனின் 2வது பெரிய நகரம் கார்கிவ்வை கைப்பற்ற கடும் தாக்குதல்: தலைநகரை சூறையாட 65 கிமீ.க்கு பீரங்கிகள் அணிவகுப்பு

கார்கிவ்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் கடந்த 5 நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகினர். உக்ரைன் ராணுவமும் கடுமையாக எதிர்த்து போரிட்டு வருகிறது. 2வது பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் நேற்று 6வது நாளாக கடும் தாக்குதலை நடத்தியது. கார்கிவ் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மைய சதுக்க கட்டிடத்தின் மீது ராக்கெட் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது. இதில், இந்திய மாணவர் ஒருவர் உட்பட 11 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிளஸ்டர் எனப்படும் கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறது. இதுமட்டுமின்றி ஐநா தடை விதித்த வேக்கூம் வகை குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி போர் குற்றங்களை புரிவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால், இத்தகவல்களை ரஷ்யா மறுத்து வருகிறது. ரஷ்ய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலால் மக்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் தீவிர தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ஓக்திர்காவில் ராணுவ முகாமில் வீசப்பட்ட வெடிகுண்டில் 70 உக்ரைன் ராணுவம் வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. கார்கிவ் மற்றும் கிவ் நகரை அதன் எல்லையை ஒட்டி 65 கிமீ நெடுநீண்ட தூரத்திற்கு ரஷ்ய ராணுவம் ஏராளமான பீரங்கி மற்றும் ஆயுதங்களை அணிவகுத்து நிறுத்தி உள்ளது. எனவே, இன்று கீவ் நகரில் மிகப்பெரிய தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது. கீவ் நகரின் சில உயரமான கட்டிடங்களின் மீது பிளஸ் உள்ளிட்ட சில வித்தியாசமான அடையாளங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த கட்டிடங்களை ரஷ்ய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்த குறிக்கப்பட்டு இருக்கலாம் என்பதால், அவற்றை அடையாளம் கண்டு மக்கள் உடனடியாக அழிக்க வேண்டுமென உக்ரைன் ராணுவம் அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் கீவ் நகரில் உள்ள இந்திய மாணவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இன்று பேச்சுவார்த்தை
பெலாரசில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், ரஷ்ய ராணுவம் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தி இருந்தது. இதே போல், உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர ரஷ்ய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படாததால், இன்று மீண்டும் பெலாரசில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

அமெரிக்காவில் உளவு 12 ரஷ்யர்கள் வெளியேற்றம்
ஐநா சபையில் இடம்பெற்றுள்ள பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் நியூயார்க் நகரில் உள்ள தலைமையகத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில், ஐநா.வுக்கான தூதரக பிரிவை சேர்ந்த 12 ரஷ்ய அதிகாரிகள், தங்கள் நாட்டுக்கு எதிராக உளவு பார்த்து வந்ததாக உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா நேற்று உத்தரவிட்டது.

Tags : Kharkiv ,Ukraine , Ukraine, heavy attack, artillery parade
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...