×

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தியில் குவிந்த பக்தர்கள்: விடிய விடிய தரிசனம்

ஸ்ரீகாளஹஸ்தி: மகா சிவராத்திரியில் ஸ்ரீகாளஹஸ்தியில் குவிந்த பக்தர்கள் ‘ஓம் நமசிவாய, ஹரஹர மஹாதேவா, சம்போ சங்கரா’ என்ற பக்தி முழக்கத்துடன் விடிய விடிய தரிசனம் செய்தனர். உலக பிரசித்தி பெற்ற வாயுலிங்கமாக திகழும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை 2 மணிக்கு மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க கோயில் அர்ச்சகர்கள் பவித்ர மந்திரங்களோடு கோயில் நடை திறக்கப்பட்டது.

பின்னர் கோபூஜை,
பவித்ர ஸ்நானம் செய்த (கோ) பசு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்தது. பக்தர்களை சர்வ தரிசனத்திற்கு அதிகாரிகள் அனுமதித்தனர். காலை 5 மணியில் இருந்து  சுவாமி அம்மையார்களுக்கு கோயில் அர்ச்சகர்கள் சாஸ்திர பூர்வமாக அபிஷேகங்களை நடத்தினர். இந்த அபிஷேகங்களுடன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் பக்தர்களுக்கு நித்திய அபிஷேகம் மூர்த்தியாக  தரிசன பாக்கியத்தை ஏற்படுத்தினர்.

அதிகாலை 2 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுவாமி, அம்மையார்களை தரிசனம் செய்கையில் ‘‘ஓம் நமசிவாய, ஹரஹர மஹாதேவா, சம்போ சங்கரா’’ என்று பரமேஸ்வரரை வேண்டினர். காலை 11 மணிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் இந்திர விமான வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்தில் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து காட்சியளித்தார்.

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், தாயார் வீதியுலா
ஸ்ரீகாளஹஸ்தியில் நேற்றிரவு மகா சிவராத்திரியையொட்டி நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் 4 மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகளோடு ஊர்வலமாக வந்தனர். வீதிவுலாவின் போது, மேளதாளங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் பஜனைகள், கோலாட்டம் பொய்க்கால், குதிரையாட்டம் மற்றும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நடன நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை லிங்கோத்பவ தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்தனர்.



Tags : Srikalahasti ,Maha Shivaratri , Maha Shivaratri, Srikalahasti, Devotees, Darshan
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்