×

10 பேர் குழு பங்கேற்பு சிந்து நதி நீர் பிரச்னை இந்தியா - பாக். பேச்சு

புதுடெல்லி: நிரந்தர சிந்து நதி நீர் ஆணையத்தின் கூட்டத்திற்காக 10 பேர் கொண்ட இந்திய அதிகாரிகளின் தூதுக் குழு, வாகா எல்லை வழியாக நேற்று பாகிஸ்தான் சென்றுள்ளது. சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக 1960ம் ஆண்டில் சிந்து நீர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதைய பிரதமர் நேரு, பாகிஸ்தான் அதிபர் அயூப் கானும் இதில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் தொடர்பான தரவுகளை பரிமாறவும், ஒத்துழைக்கவும் இரு நாடுகளும் நிரந்தர சிந்து ஆணையத்தை உருவாக்கி, இரு தரப்பிலும் ஒரு ஆணையரை நியமித்தன.

அதன்படி, இந்த ஆணையத்தின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறையாவது இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடத்தப்படும். இந்தாண்டுக்கான கூட்டம் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இதில் பங்கேற்பதற்காக 10 பேர் கொண்ட இந்திய அதிகாரிகள் குழு லாகூர் வழியாக இஸ்லாமாபாத் சென்றுள்ளது. இதில், இந்தியாவின் சிந்து நீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா, 3 பெண் அதிகாரிகள், ஒன்றிய நீர் ஆணையம், ஒன்றிய மின்சார ஆணையம், தேசிய நீர்மின் நிலைய ஆணையம், ஒன்றிய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் என 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், தற்போதைய சிந்து நீர் நிலவரம், வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே அறிவித்தல், சட்லெஜ் நதி நீரை பராமரித்தல், எதிர்கால திட்டங்கள், ஆய்வு சுற்றுலாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

முதல்முறை
சிந்து நதி நீர் ஆணைய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, இந்த கூட்டத்தில் இந்திய பெண் அதிகாரிகள் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. ஜனவரி 2ம் வாரத்தில் நடைபெற இருந்த இக்கூட்டம், இந்தியாவின் வேண்டுகோள்படி ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது நடைபெறுகிறது.

Tags : Indus ,India ,Pak , Indus water problem, India - Bagh. Speech
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...