×

ஆத்தூர் சிறையில் நூதன முறையில் கயிறு கட்டி சிறைக்குள் ரவுடிக்கு பிரியாணி, மது பாட்டில் சப்ளை: அதிகாரிகள் அதிர்ச்சி; ரகசிய விசாரணை

சேலம்: ஆத்தூர் மாவட்ட சிறையில் உள்ள ரவுடிக்கு வெளியில் இருந்து கயிற்றில் மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், மது பாட்டில் ஆகியவற்றை உள்ளே அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சினிமாவில் நடிகர் கவுண்டமணி இளநீர் வியாபாரம் செய்வார். அவரிடம் உள்ள இளநீரை கயிறு கட்டி செந்தில் மறுமுனைக்கு அனுப்ப, அதனை வடிவேலு இழுத்து புதிதாக இளநீர் கடை போடுவார். இதேபோல கயிறு கட்டி சிறையில் உள்ள ரவுடிக்கு பிரியாணி, மதுபாட்டிலை அவரது நண்பர்கள் அனுப்ப அதனை ரவுடி நைசாக உள்ளே இழுத்து சாப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் சேலம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட கைதிகளை வைக்கலாம். தற்போது அங்கு சுமார் 150 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ரவுடி ஒருவரை கைது செய்த போலீசார் ஆத்தூர் சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நண்பர்கள் உதவியுடன் சிறைக்குள்ளேயே மதுவுடன் பிரியாணி விருந்து சாப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் ஆத்தூர் சிறையின் பின் பகுதியில் இருந்து அந்த ரவுடி கைதியின் ஆதரவாளர்கள் கயிறு ஒன்றில் சிறிய கல்லைக்கட்டி சிறையின் மருத்துவமனை பக்கம் வீசியுள்ளனர்.

தயாராக அங்கிருந்த ரவுடி அதனை பிடித்துக்கொண்டு மெதுவாக கயிறை இழுத்துள்ளார். அந்த கயிறில் மட்டன் பிரியாணி பார்சல், சிக்கன் வறுவல் பார்சல் மற்றும் மதுபாட்டில் ஆகியவை கட்டப்பட்டு இருந்துள்ளது. அதனை நைசாக உள்ளே இழுத்த கைதி யாருக்கும் தெரியாமல் அதை சாப்பிட்டுள்ளார். பின்னர் மீதமிருந்த மதுபாட்டிலை வெளியே வீசியபோது, அது சுவரில் பட்டு உள்ளே சிறைக்குள்ளேயே விழுந்துள்ளது. சத்தம் கேட்டு சென்ற வார்டன், மதுபாட்டிலை எடுத்துள்ளார். அவர் உள்ளே எப்படி மது பாட்டில் வந்தது என விசாரித்தபோது கைதிக்கு வெளியில் இருந்து கயிறு கட்டி சப்ளை செய்தது தெரியவந்தது.

உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இத்தகவலை சேலம் மத்திய சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை. இவ்விவகாரம் தற்போது மத்திய சிறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து, நேற்று ஆத்தூர் சிறைக்கு சென்ற சேலம் மத்திய சிறை அதிகாரிகள் வார்டன்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கைதியும் கயிறு மூலம் பிரியாணி, மதுபாட்டில் இழுத்து சாப்பிட்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அன்று பணியில் இருந்த 2 வார்டன்களை சேலத்திற்கு அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rowdy ,Attur jail Secret , Rowdy's biryani, liquor bottle supply to Attur jail Secret investigation
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...