பயிர் இன்சூரன்ஸ் கிடைக்காத விரக்தி செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்-திருவாரூர் அருகே பரபரப்பு

முத்துப்பேட்டை : திருவாரூர் அருகே பயிர் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காத விரக்தியில் செல்போன் டவர் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர்-சங்கேந்தி பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன்(46). விவசாயியான இவர், சாகுபடி செய்த பயிருக்கு 2021-22ம் ஆண்டுக்கான காப்பீட்டு தொகை செலுத்தியிருந்தார். ஆனால் இவருக்கு வரவேண்டிய காப்பீட்டு தொகை கிடைக்க வில்லை. அதே பகுதியை சேர்ந்த 56 பேருக்கும் விடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர். விவசாய செலவிற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியின்றி தவித்த விவசாயி கலைச்செல்வன், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் காப்பீட்டு தொகை கிடைக்க வில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் அதே பகுதியில் உள்ள 100 அடி செல்போன் டவர் மேல் ஏறி உச்சிக்கு சென்ற கலைச்செல்வன், தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். எடையூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், விஏஓ புருஷோத்தமன், ஊராட்சி தலைவர் ராஜா மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள், விரைவில் பயிர் காப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் 2.30மணியளவில் கலைச்செல்வன் கீழே இறங்கி வந்தார். பின்னர் போலீசார் அவரை எடையூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories: