மருத்துவருக்கு படிக்கும்போதே முறைகேடா?!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில், தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் தங்களுக்குப் பதிலாக வேறொருவரை தேர்வெழுத வைத்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது. கடந்த மாதம் இறுதியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது முதலாமாண்டு படிக்கும் உதித்சூர்யா, தனக்குப் பதிலாக வேறொருவரை நீட் தேர்வு எழுதவைத்து மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றார் என்ற குற்றச்சாட்டு ஊடகங்களில் வெளியான பிறகு, உதித் சூரியா கைதானார். அதைத் தொடர்ந்து, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட வேறு 3 மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கைதாகியுள்ளனர்.

இதில், உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனும் ஒரு போலிடாக்டர் என்பதும், கைதான மாணவர்களில் ஒரு மாணவர் தனக்கு பதிலாக தேர்வு எழுதுவதற்கு ரூ.20 லட்சம் வரை முகவரிடம் தந்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. மேலும், உண்மையான தேர்வர்கள் ஒரு நகரத்திலும், போலியான தேர்வர்கள் வேறு நகரத்திலும் தேர்வெழுதியுள்ளதால் இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் தமிழக மருத்துவ மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர், தேர்ச்சி பெற்று படித்து வருபவர்கள் உண்மையான மாணவர்களா? என்று தற்போது, சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது, ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்துவரும் நிலையில் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, மாணவர்களின் லைவ் புகைப்படங்களை பயன்படுத்துவது, ஆதார் தரவுகளில் உள்ள பயோ மெட்ரிக் தகவல்களை அந்த லைவ் புகைப்படத்தை கொண்டு சரிபார்ப்பது மற்றும் கருவிழி சோதனை போன்ற யோசனைகளை தமிழக அரசு தேசிய தேர்வு முகமையிடம் முன் வைத்தது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளோடு கலந்துபேச தமிழக சுகாதாரத்துறையை அழைத்ததோடு, அதற்கான ஒப்புதலும் கிடைத்துவிட்டது. இதற்கிடையில், ‘நீட் முறைகேடு தொடர்பான வழக்கில் அரசு அதிகாரிகளின் உதவியில்லாமல் மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை’ என சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்துள்ளதையும் நாம் இங்கே பேசியாக வேண்டும்.

‘ஒருவர் மருத்துவக்கல்லூரியில் இடம் பெற 20 லட்சம் வரை லஞ்சம் தருகிறார் என்றால், மருத்துவத் தொழில் எவ்வளவு லாபம் கொழிக்கும் தொழிலாக உள்ளது என்பதையே இது வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது. இதை ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள். மேலும், மருத்துவப் படிப்புக்கான இடங்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் எந்த வகையிலாவது மருத்துவராகிவிட வேண்டும் என மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி இருப்பதும் தெரிகிறது. இந்தியா போன்ற நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் மருத்துவர்கள் இல்லாதிருப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். சில மருத்துவர்களின் பேராசையும் இதற்கு உதாரணம்.

இன்று நம் நாட்டில் பார்த்தால், ‘ஒரு மருத்துவர் தான் மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராக சர்வீஸ் செய்யும்போதே, தனக்கு வரப்போகும் துணையும் மருத்துவராக இருக்க வேண்டும்; தன் மகன்/மகளையும் மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட வேண்டும்; அவர்கள் மணக்கப் போகிறவரும் அதாவது, மருமகன்/ மருமகளும் மருத்துவராக இருக்க வேண்டும். இப்படித் தொன்று தொடர்ந்து பரம்பரை, பரம்பரையாக தன் குடும்பமே மருத்துவத் தொழில் நடத்த வேண்டும் என்ற பேராசை. அதற்குக் காரணம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளில் முதலீடு செய்துவிடுகிறார்கள்.  

அதிலிருந்து வரும் கொள்ளை லாபத்தை தம் பரம்பரையினர் தலைமுறை, தலைமுறையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம். இதுவே, எப்படியாவது, தங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட வேண்டும் என்ற, அவர்களை இதுபோன்ற மோசடிகளில் நடத்தத் தூண்டுகிறது. அதுமட்டுமல்ல, படிக்கும் காலத்தில் சரியாக வகுப்புகளுக்கு வராமல் நல்ல மதிப்பெண்கள் பெறாத, பணக்கார மாணவர்கள்தான் இன்று பல மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனைகளின் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். நேர்மையாக பயின்ற  மாணவர்கள் இன்றளவும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல்தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க வேண்டுமானால், மருத்துவ சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அதிலும், சாதாரண மக்களும் மருத்துவம் பயிலும் வகையில் அரசாங்கம் ஏன் மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கையை அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிகப்படுத்தக் கூடாது? இன்னொரு விஷயம், மருத்துவ மாணவர்களை தேர்ந்தெடுக்கும் வேலையை சில தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் விட்டிருப்பதும் காரணம். இது பணபலம், அரசியல் பலம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவர்கள் ஆக முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு ஆள்மாறாட்டம் நடந்தது வெளியில் தெரிந்துள்ளதால் நடவடிக்கை பாய்கிறது, இதற்கு முந்தைய ஆண்டுகளில், தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இதுபோல நடந்திருந்தால் அந்த தவறுகளுக்கு அரசு எந்த வகையில் தீர்வு கண்டுபிடிக்கும்? நீட் முறைகேடு தொடரக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்வது வரவேற்கத்தக்கது.

ஆனால், இந்த பிரச்னை தமிழகத்தில் மட்டும் நடந்தது என்று உறுதியாக தெரியாத நிலையில் இருக்கிறோம். ஏற்கனவே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. மருத்துவக் கல்விக்கான இடம் ஒதுக்குவதில் ஊழல் ஒழிக்கப்படும், நேர்மையாக தேர்வு நடத்தி, முறையாக இடம் ஒதுக்கப்படும் என்று கூறி நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களை சோதனை செய்ததில் காட்டிய அக்கறையை, மருத்துவ சீட் வழங்குவதில் பின்பற்றவில்லை. தற்போது மத்திய அரசு பயோமெட்ரிக் சோதனையை வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இது முன்பிருந்த நிலையைவிட சற்று சிறப்பானதாக இருந்தாலும், பயோமெட்ரிக் மட்டுமே நீட் பிரச்னைக்கு தீர்வல்ல; அதையும் சோதனையை அரசாங்க ஊழியர்களான போலீஸ் மட்டும் நடத்தக்கூடாது.

அதிலும் அரசியலும் ஊழலும் நடக்க வாய்ப்புள்ளது. யாருடைய தலையீடும் இல்லாமல், சுதந்திரமாக செயல்படக்கூடிய ஏஜென்சிகளிடம் சோதனை செய்யும் வேலையை கொடுக்க வேண்டும். அடுத்து, மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கையை அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்த்த வேண்டும் என்பதுதான் உண்மையான தீர்வாக இருக்க முடியும். நீட் தேர்வு முறைகேடுகள் வெறும் ஒரு மாநிலத்தை மட்டும் பாதிக்கும் சம்பவம் அல்ல என்பதையும் சர்வதேச நாடுகளில் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்பதையும் இந்த நேரத்தில் நாம் உணர வேண்டும்.

இந்திய மாணவர்கள் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படிக்க நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அந்த தேர்வை எழுத விண்ணப்பிக்க வேண்டும் எனில், இந்தியாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்த மாணவர்களாக இருக்க வேண்டும். தொடர்ந்து முறைகேடுகள் நடந்தால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது. இதனால் பல்லாயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்துவிடும் அபாயமும் இதில் இருக்கிறது.

ஆதார் கார்டு சோதனையோ, பயோமெட்ரிக் சோதனையோ, விழித்திரை சோதனையோ எதுவானாலும், மாணவர்களை சோதனை செய்யும் ஒழுங்குமுறை அதிகார மையத்தில், அரசு, தனியார் ஏஜென்சி என அனைத்து தரப்பினரும் இருக்க வேண்டும். அமெரிக்கா, ரஷ்யா போன்ற வெளிநாடுகளில் மருத்துவ மாணவர்களை தேர்வு செய்யும் வேலையில் அரசாங்க ஊழியர்கள் மட்டும் பார்ப்பதில்லை. மத்திய, மாநில அரசுகள் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் நிலையில் நாம் இருக்கிறோம்.

( அலசுவோம் !)
எழுத்து வடிவம் : உஷா நாராயணன்

Tags : doctor ,
× RELATED கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்...