×

கடலூரில் பரபரப்பு..!!: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கோபுர கலசங்கள் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே 1,500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கோபுர கலசங்கள் திருடப்பட்டுள்ளதாக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களை மையமாக கொண்ட இக்கோவிலில் 5 மூர்த்திகள், 5 தேர்கள், 5 கோபுரங்கள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 நந்திகள், 5 கொடிமரங்கள் என அனைத்தும் 5-ஆக அமையப் பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள், பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் உள்ள 3 கலசங்கள் நள்ளிரவில் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இந்த 3 கலசங்களும் 3 அடி உயரம் கொண்டவை என்றும், 3 கலசங்களிலும் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்து கலசங்கள் திருடப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் நள்ளிரவில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kadalur ,Varthasalam Varthakriswarar Temple , Cuddalore, Virudhachalam, Viruthakriswarar, tower urn, theft, webcasting
× RELATED தாமதமாகும் தடுப்புக்கட்டை பணிகள்...