×

முதல்வர் ஸ்டாலினுக்கு 69வது பிறந்த நாள்.. கேரள முதல்வர், கமல் உள்ளிட்டோர் வாழ்த்து; அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!!

சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கனிமொழி, துரைமுருகன் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் பெரியார் நினைவிடத்திலும்  மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, எம்.பி. தயாநிதி மாறன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்நிலையில் திமுக மகளிரணி தலைவரும், எம்.பி.யுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், பெரியார்- அண்ணா - கலைஞர்- உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் தளபதி - அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்  துரைமுருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், முதல்வராகி மு.க.ஸ்டாலின் ஒருமுறைதான் டெல்லி சென்றார்; அவர் மறுமுறை டெல்லி செல்வதற்கு முன்பே அரசியலில் அகில இந்திய நட்சத்திரமாக ஜொலித்துவிட்டார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதரல்ல; சரித்திரம் படைக்கப் போகும் ஓர் யுகபுருஷன் என்று கூறியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தமது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்திருக்கும் உயர்ந்த கொள்கைகளுக்காக அவர் தொடர்ந்து போராடவும் வாழ்த்துகிறேன்என்று தெரிவித்துள்ளார்.


திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவை புதிய விடியலை நோக்கி அழைத்துச் செல்லும் பொறுப்பை அவர் ஏற்பார் எனவும், இந்தியத் திருநாட்டுக்கு ஒரு நல்லரசு தேவை. அந்தத் தேவையை நிறைவேற்றிக் காட்டும் வல்லமையும், துணிவும், அறிவாற்றலும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நிரம்ப உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை செய்து காட்டுவார்’ என தெரிவித்துள்ள அவர், கோடான கோடி உலகத்தமிழர்களில் ஒருவனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்று  கூறியுள்ளார்.


மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மனதிற்குகந்த நண்பர், தமிழக முதல்வர் @mkstalin பிறந்த நாள் காண்கிறார். எதிர்ப்போர் கருத்துக்கும் இடமளித்து, தன் எண்ணத்துக்கும் செயலுக்கும் வலு கூட்டிச் செயல்படும் அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்து. நீடு வாழ்க. எனத் தெரிவித்துள்ளார்.



Tags : Chief Stalin ,Kerala ,CM ,Kamal ,Anna , Chief Minister Stalin, Chief Minister of Kerala, Kanimozhi
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...