சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடச் சென்றவர்களுக்கு அனுமதி மறுத்ததால் போராட்டம்: 80 பேர் கைது

சிதம்பரம்:  சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் யாரும் ஏறக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் மற்றும் சமூக, தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கோயில் எதிரே உள்ள தேரடி தெருவில் தெய்வத்தமிழ் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடராஜர் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் தேவாரம், திருவாசகம் பாட திரண்டனர்.

குச்சனூர் சித்தர் பீட ராஜயோக வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார் தலைமையில் வந்த தெய்வத் தமிழ் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களுடன் தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மணியரசன், உள்ளிட்டோரும் வந்தனர். இதையடுத்து அவர்கள் கோயில் எதிரே சாலை ஓரத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாத்தியக் கருவியை இசைத்தபடி தேவாரம் பாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர். அதில் சிலர் வாகனத்தில் ஏற மறுத்து தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் போலீசார் அவர்களை வேனில் ஏற்றினர். அப்போது வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, குச்சனூர்  சித்தர் பீடாதிபதி குச்சனூர் கிழார் கூறுகையில், சிதம்பரம் நடராஜர் கோயில்  தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல. சில கோயில்களில் பிரச்னை ஏற்பட்டால்  அறநிலையத்துறை கோயிலை ஏற்றுக்கொள்கிறது. அதுபோல் சிதம்பரம் நடராஜர்  கோயிலையும் அறநிலையத்துறை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: