×

குர்பாஸ் அபார சதம் ஆப்கானிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி

சாட்டோகிராம்: வங்கதேச அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் 2 ஒருநாள் போட்டியிலும் வென்று 2-0 என முன்னிலை பெற்ற வங்கதேச அணி தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 46.5 ஓவரில் 192 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லிட்டன் தாஸ் 86, ஷாகிப் அல் ஹசன் 30, மகமதுல்லா 29* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆப்கான் பந்துவீச்சில் ரஷித் கான் 3, முகமது நபி 2, பரூக்கி, ஒமர்ஸாய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆப்கான் 40.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து வென்றது.

ரியாஸ் 35, ரகமத் ஷா 47, கேப்டன் ஹஷ்மதுல்லா 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அபாரமாக விளையாடி சதமடித்த தொடக்க வீரர் ரகமதுல்லா குர்பாஸ் 106 ரன் (110 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), நஜிபுல்லா ஸத்ரன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. குர்பாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருதை வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் தட்டிச் சென்றார். அவர் 3 போட்டியில் 223 ரன் குவித்து அசத்தினார்.

Tags : Gurbas' ,Afghanistan , Qurbas' huge century is a consolation victory for Afghanistan
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி