×

மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற ஏப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்: அறநிலையத்துறை தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டு யாத்திரையை முழுமையாக நிறைவு செய்த, தமிழ்நாட்டை சேர்ந்த இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு தமிழக அரசின்  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டத்தின்படி, 1.4.2021 முதல் 31.3.2022 முடிய உள்ள காலங்களில் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை செய்து முழுமையாக நிறைவு செய்தவர்கள் மட்டுமே விண்ணபிக்க தகுதியானவர்கள்.

புனித யாத்திரைக்கான அரசு மானியம் வேண்டி 1.3.2022 முதல் 30.4.2022 வரையிலான காலம் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து சான்றுகளையும் பெற்று விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் இணைய தளத்தில் www.tnhrce.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள, உறுதி மொழிகளுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தை மட்டுமே பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய முழுமையான ஆவணங்களுடன் ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 034 என்ற முகவரிக்கு (30.4.2022) தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதி வாய்ந்த பயனாளிகள் அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார். தேர்வு குழுவின் முடிவே இறுதியானதாகும். ஒவ்வொரு யாத்திரைக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகள் 500 பேருக்கு மேல் இருப்பின் பயனாளிகளின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் குறைந்த வருமானம் கொண்டவர்களிடமிருந்து ஏறுமுகத்தில் துவங்கி முதல் 500 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார். மேலும், தேவையான கூடுதல் விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளம் www.tnhrce.gov.in மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Manasarovar ,Muktinath ,Charitable Department , Manasarovar, Muktinath pilgrims can apply for government subsidy by April 30: Charitable Department Information
× RELATED நெல்லை முத்துமாலை அம்மன் கோயில்...