காஷ்மீர் போல தமிழகம் துண்டாடப்படலாம்: உமர் அப்துல்லா எச்சரிக்கை

சென்னை: ‘ஜம்மு-காஷ்மீரை துண்டாடியது போல் நாளை தமிழ்நாடும் துண்டாடப்படலாம்’ என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரித்துள்ளார். முதல்வர் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா பேசியதாவது: என்னை இந்த நிகழ்வில் பங்கேற்க அழைத்தமைக்காக உண்மையில் பெருமைப்படுகிறேன். அவரது 13வயது முதல் 23வயது வரை அவரது  போராட்ட வாழ்க்கையை,அரசியல் வாழ்க்கையை புத்தகமாக எழுதியிருக்கிறார்.சுமார் ஓராண்டுசிறையில் கழித்து  இருக்கிறார்.

இதுவரை திமுக வெற்றிப் பெறாத இடங்களில் கூட உள்ளாட்சி தேர்தலில் வென்றிருப்பதாக செய்திதாளில் படித்தேன். உங்கள் பணிக்காக மக்கள் தந்த மிகப்பெரிய பரிசு அது. நான் இங்கு வந்தததற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி இரண்டாக துண்டாடப்பட்டது. மக்களின் கருத்தை கேட்காமல் துண்டாடினர். மக்கள் எதிர்ப்பை கண்டுக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசின் செயலை நிறையபேர்  கண்டுக் கொள்ளவில்லை. எங்களுக்கு நெருக்கமாக இருந்த தலைவர்கள் கூட கண்டிக்கவில்லை. ஆனால் ஒருசிலர் உடனடியாக கண்டித்தனர்.  

அதில் ஒரு குரல் தமிழ்நாட்டில் இருந்து  உடனடியாக  வந்தது. காஷ்மீர் துண்டாடப்பட்டதை விமர்சித்து, கண்டித்து குரல் எழுப்பியதற்கு தமிழ்நாட்டுக்கு, திமுகவுக்கு, ஸ்டாலினுக்கு நன்றிச் சொல்லதான் காஷ்மீர் மக்கள்சார்பாக இங்கு வந்தேன். எங்களுக்கு தேவையான நேரத்தில் தோள் கொடுக்கும் உண்மையான தோழனாக தமிழ்நாடு உள்ளது. காஷ்மீரை துண்டாடியது போல் மற்ற மாநிலங்களையம் துண்டாடலாம். உங்களை கேட்கமலே தமிழ்நாட்டை இரண்டு, மூன்றாக துண்டாடக் கூடும். அதனால்தான் எச்சரிக்கிறேன். ஆளுநர்களை வைத்து ஆள நினைக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சும்மா உட்கார வைத்து விட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் மாநிலங்களை ஆளும் முயற்சியில் இருக்கின்றனர்.முடிப்பதற்கு முன்பு மார்ச் 1ம் தேதி  பிறந்தநாள் காணும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்துகிறேன்.

* காஷ்மீர் கம்பளம் பரிசு

உமர் அப்துல்லா பேசி முடிக்கும் போது, ‘முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக காஷ்மீர் சால்வையை பரிசளிக்க நினைத்தேன். காஷ்மீர் சால்வை உலகப் புகழ் பெற்றது. ஆனால் தமிழகத்தில் நிலவும் வெப்பநிலைக்கு அதனை அவர் பயன்படுத்த முடியாது. அதனால் அவருக்கு காஷ்மீர் கம்பளம் காஷ்மீர் மக்கள் சார்பில் பரிசாக அளிக்கிறேன்’ என்று கூறினார். பின்னர் தரை விரிப்பை ஸ்டாலினிடம் வழங்கினார்.

Related Stories: