×

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ ‘அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும்’ என்ற திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன்: ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன் என்று உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன் பாகம் -1’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் மறைவுக்கு பிறகு கோடிக்கணக்கான திமுகவினரின் தலைவனாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவில் பேசும்போது ஒரு கருத்தை குறிப்பிட்டுச் சொன்னேன். உங்களில் ஒருவன்தான் நான் என்பதை எந்த நாளும் இந்த ஸ்டாலின் மறக்க மாட்டான் என்பதன் அடையாளமாகத்தான் எனது வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘உங்களில் ஒருவன்’ என்றே பெயர் சூட்டி இருக்கிறேன்.

எனது 23 வயது வரையிலான வாழ்க்கைதான் இந்த புத்தகம். 1953ம் ஆண்டு மார்ச் 1 அன்று நான் பிறந்தேன். அதாவது நாளை (இன்று) எனது பிறந்தநாள். இன்றைய தினம் பிப்ரவரி 28. எனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னராக இந்த புத்தகம் பிறக்கிறது. 1976ம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தின்படி நான் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்று சுவடுகள்தான் இந்த புத்தகம்.
நான் 12 வயது பையனாக இருந்தபோது மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசப்பாதுகாப்பு சட்டப்படி கலைஞர் கைது செய்யப்படுகிறார். முரசொலி மாறன் அவர்களும் கைது செய்யப்படுகிறார்.

கல்லூரி படிப்பை முடித்ததும் நான் மிசாவில் கைதாகிறேன். கோபாலபுரம் வீட்டின் ஓர் அறையாகத்தான் சிறை இருந்தது. அதுதான் என்னை செதுக்கியது. கோபாலபுரம் வீடு தமிழ்நாட்டின் நிரந்தரமான அரச சபை. திராவிட இயக்கத்தின் திருச்சபை. திரையுலக கலைஞர்களுக்கு கலைச்சபை. இலக்கியவாதிகளுக்கு சிந்தனை சபை. மொத்தத்தில் எங்கள் உயிர்ச்சபை. அந்த உயிர்சபை தான் என்னை உருவாக்கியது. அந்த வீடு என்னை வளர்த்தது, ஆளாக்கியது, பக்குவப்படுத்தியது, பண்படுத்தியது. பல்வேறு பொறுப்புகளுக்கு என்னைத் தகுதிப்படுத்தியது. அந்த வகையில் பார்த்தால், இந்த புத்தகம் அந்த வீட்டின் வரலாறு.

பள்ளி பருவத்தில் கழக பாடம் படித்த வரலாறு. பாடப்புத்தகங்களோடு சேர்த்து முரசொலி படித்த வரலாறு. 1953ல் நான் பிறந்தபோது குலக்கல்வி முறையை எதிர்த்து போராடினோம். இன்று நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறோம். பள்ளி மாணவனாக நான் இருந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இன்றும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 1971ம் ஆண்டு அண்ணா விழாவை நான் நடத்தியபோது 3 மாநில முதலமைச்சர்கள் பங்கெடுத்து மாநில சுயாட்சிக்காக முழங்கினார்கள். இன்றும் முழங்கி வருகிறோம்.

பொதுவாழ்வை பூங்காவாக நான் எப்போதும் கருதுவது இல்லை. அது புயலை எதிர்த்து நிற்பதாகத்தான் அப்போதும் இருந்துள்ளது. இப்போதும் இருக்கிறது. அதற்கு காரணம் எனது குறிக்கோள் என்பது பதவியாக, பொறுப்பாக மட்டும் இருந்தது இல்லை. கொள்கையாக இருந்தது. சுயமரியாதை கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழிநடத்துவதில் தமிழின தலைவர் கலைஞர், மொழி உரிமையில் இனமான பேராசிரியர், இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள்தான் என்னை செதுக்கிய சிற்பிகள். இந்த நால்வரும் தனிமனிதர்கள் அல்ல. தத்துவத்தின் அடையாளங்கள்.

அத்தகைய தத்துவத்தின் அடையாளமாகவே நான் இருக்க விரும்புகிறேன். எனது தத்துவம் என்பதற்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர். ‘மாடல்’ என்பது ஆங்கில சொல்தான். அதை தமிழில் சொல்வதாக இருந்தால் ‘திராவிடவியல் ஆட்சிமுறை’தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும். கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், சமூக மேம்பாட்டில், இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி என்பது அனைத்து சமூகங்களையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.

 ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் வளர்ச்சியாக இல்லாமல், அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பால் பேதமற்ற, ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு ஆகும். அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அதைத்தான் அரசியல் அமைப்பு சட்டமும் சொல்கிறது. அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா தேஜஸ்வி ஆகியோர் இங்கே அழைக்கப்பட்டுள்ளார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் எழுந்து நின்று அருமைச் சகோதரர் ராகுல்காந்தி, இந்தியா ஒன்றியங்களின் நாடு. தமிழகத்தை ஒருபோதும் பாஜ ஆள முடியாது என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக அவர் உள்வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது.

இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தி தலைவர்கள் அடைய வேண்டும் என்றுதான் அண்ணா, கலைஞர் விரும்பினார். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தின் நெறிமுறைகள் குறித்து சகோதரர் ராகுல்காந்தி அதிகம் பேசத் தொடங்கி இருப்பதற்கு நான் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு, சிந்தனை உரிமைகள் பறிக்கப்பட்டு, செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு - இன்றைய தினம் மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும். மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதன் காரணமாக, அந்த மாநில மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. அதனை அனைத்துக்கட்சிகளும் உணர்ந்துள்ளன. ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி’ என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது.

அதைத்தான் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார். அதேபோல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் - சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக்கூட்டமைப்பை திமுக சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்திய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உறுதி அளிக்கிறேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

திராவிட இயக்கமும் திரையுலகமும் பிரிக்க முடியாதவை. அதேபோல் கோபாலபுரமும் கோடம்பாக்கமும் பிரிக்க முடியாதவை. தலைவர் தொடங்கி இன்று உதயநிதி வரை அது தொடர்ந்து வருகிறது. கலையுலகின் பிரதிநிதியாக இனமான நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களில் ஒருவன் நூலை உலகத் தரத்துடனும், அழகியல் திறத்துடனும், கலைஞரின் பெரும்பாலான நூல்களை வெளியிட்ட பூம்புகார் பதிப்பகம் எனது நூலையும் வெளியிட முன்வந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றப் பணியாக இருந்தாலும், மக்கள் பணியாக இருந்தாலும், மகளிரணி பணியாக இருந்தாலும் அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கனிமொழி, இவ்விழாவுக்கான வரவேற்புரை ஆற்றினார். அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள்,எனது நெருங்கிய நண்பர்கள், கழகத்தின் முன்னணியினர் என அரங்கம் நிறைந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் தனித்தனி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் உருவாக்கப்பட்டவன் நான். உங்களால் வளர்த்தெடுக்கப்பட்டவன் நான். என்றும் உங்களில் ஒருவனே. என்றும் உங்களில் ஒருவனே என்பதை சொல்லி விடைபெறுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Tags : India ,Chief Minister ,MK Stalin , It will be my mission to inculcate throughout India the Dravidian model of the doctrine of ‘One Tribe, One God’ and ‘Equal Rights for All National Races’: Chief Minister MK Stalin's speech at the launch of his history book ‘One of You’
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...