மொகாலியை அடைந்ததும் டெஸ்ட் பற்றி சிந்திப்போம்; இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

தர்மசாலா: இந்தியா-இலங்கை அணிகள் இடையே 2வது மற்றும் கடைசி டி.20 போட்டி தர்மசாலாவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 38 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 74 , சண்டிமால் 22 ரன் எடுத்தனர். இந்திய பந்து வீச்சில் அவேஷ்கான் 2விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்தியா 16.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித்சர்மா 5, சாம்சன் 18, தீபக்கூடா21, வெங்கடேஷ் அய்யர் 5 ரன்னில் அவுட்டாக , ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டம் இழக்காமல் 45 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 73, ஜடேஜா 22(15பந்து) ரன் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 3-0 என இந்தியா தொடரை கைப்பற்றி  ஒயிட்வாஷ் செய்தது.

ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். அடுத்ததாக 2 டெஸ்ட் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் மொகாலியில் வரும் 4ம்தேதி தொடங்குகிறது. நேற்று வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: நாங்கள் ஒன்றாக, நன்றாக விளையாடினோம. தொடரில் இருந்து நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் வெளிவந்தன. எங்களிடம் என்ன வகையான பெஞ்ச் வலிமை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது. அணியில் உங்கள் இடம் பற்றி வீரர்கள் யாரும் கவலைப்படவேண்டாம்.

அணியில் உள்ள இடைவெளிகளை நிரப்ப விரும்புகிறோம். வாய்ப்பை பயன்படுத்தி வலிமையான அணிக்கு வலிமை சேர்க்கவேண்டும். அதை மனதில் வைத்துநாம் முன்னேற வேண்டும். இரு ஒரு பெரிய சவாலாக இருக்கும். ஆனால் அனைவரும் பார்மில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொகாலியை அடைந்ததும், டெஸ்ட் தொடரைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவோம், என்றார். இலங்கை கேப்டன் ஷனகா கூறுகையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்தியாவை வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மூத்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் கடினமாக இருந்தது. பேட்டிங்கில் பவர் பிளேவை பயன்படுத்திக்கொள்ளவில்லை, என்றார்.

Related Stories: