×

30 நவீன தாக்குதல் டிரோன்கள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா தீவிர பேச்சு

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து ரூ.22,500 கோடி மதிப்பில் 30 நவீன தாக்குதல் டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது அமெரிக்காவிடம் இருந்து 10 நவீன ரக தாக்குதல் டிரோன்கள் (எம்.கியூ.9 பி) வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு இரு நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து 30 நவீன டிரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் வானில் தொடர்ச்சியாக 35 மணி நேரம் பறக்கக் கூடியவை. ரோந்து கண்காணிப்பு, உளவு அறிதல், இலக்குகள் மீது தாக்குதல் உள்ளிட்டவற்றில் இவை சிறப்பாக செயல்படும்.  

இது குறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், ‘தற்போது ராணுவ தாக்குதல்களுக்கு இந்த நவீன டிரோன்கள்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனம் இவற்றை தயாரித்துள்ளது. இந்த டிரோன்களை முதன்முதலாக நேட்டோ அல்லாத நாடான இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, ஒப்பந்த அடிப்படையில் 2 கண்காணிப்பு டிரோன்களை ஜெனரல் அடோமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது. இவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்ய, இருநாடுகளின் அதிகாரிகளின் மட்டத்திலான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது,’ என்று தெரிவித்துள்ளன.

Tags : India ,US , India in serious talks with US to buy 30 modern attack drones
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...