ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஈழ இனவெறி தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஈழத்தில் இனவெறி தாக்குதல் தொடர்வது தெரியவந்துள்ளது. எனவே ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதிய அறிக்கை ஒன்றை நேற்று முன்நாள் வெளியிட்டிருக்கிறது. பொதுவான கடமைகளைக் கடந்து ஈழத்தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையில், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் சிறப்புக் கடமையும் இந்தியாவுக்கு உண்டு.

அதனால், ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது; ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும். அதைத் தான் உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரும் மார்ச் 3ம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது. இந்த விவாதத்தில் இந்திய அரசின் பிரதிநிதி கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதையும், இலங்கை இனச் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவும் தெற்காசிய சக்தி என்ற முறையில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: