ம.நீ.ம. வேட்பாளர் தற்கொலை; குடும்பத்தினரிடம் கமல்ஹாசன் ஆறுதல்

திருப்பூர்: திருப்பூர் காலேஜ்ரோடு கொங்கணகிரியை சேர்ந்தவர் மணி(55). சுமைப்பணி தொழிலாளியான இவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். தேர்தல் செலவிற்கு மணி ரூ.50 ஆயிரம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தேர்தல் செலவுகளை செய்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 44 ஓட்டுகள் மட்டுமே மணி பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர் மணி தற்கொலை செய்து கொண்ட தகவல் மக்கள் நீதி மய்யம்கட்சியின் தலைவர் கமலஹாசனுக்கு தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மணியின் வீட்டில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது மணியின் மனைவி சுப்பாத்தாள், மகள்கள் வெண்ணிலா, சரோஜினி ஆகியோரிடம் கமலஹாசன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, ‘‘மணியை போன்று நல்ல ஆட்கள் கிடைப்பது கடினம். என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்’’ என கூறினார்.

Related Stories: