×

ஆற்காடு அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திடீர் சாலை மறியல்

ஆற்காடு: ஆற்காடு அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய ஊரக வேலை வழங்கும் திட்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பணியாளர்களிடம் கையெழுத்து எதுவும் வாங்காமல் வேலை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் 100 நாட்களுக்கு பிறகு வேறு ஆட்களை மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும்.

ஆனால் தொடர்ந்து ஏற்கனவே இருந்தவரே மேற்பார்வையாளராகஇருந்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான முறையில் பதிலளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட பெண்கள் நேற்று ஆற்காடு -  ஆரணி சாலை சாத்தூர் கூட்ரோடு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் தொடர்ந்து 100 நாள் வேலை திட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு, ஆற்காடு பிடிஓ  செந்தாமரை மற்றும் அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் பணி மேற்பார்வையாளரை மாற்ற வேண்டும். சரியான முறையில் கூலி வழங்கி முறையாக அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி கூறினார்கள்.

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதன் பேரில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும்,பரபரப்பும் ஏற்பட்டது.

Tags : Arcot , 100-day work project workers block the road near Arcot
× RELATED ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில்...