×

‘‘திட்டங்கள் மூலம் மக்களுக்கு நன்றி சொல்வோம்’’ கோவை இனிமேல் எப்போதும் மு.க.ஸ்டாலின் கோட்டை தான்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று கோவை காளப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதைதொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வாக்காள பெருமக்கள் வழங்கி உள்ளனர். குடிநீர், சாக்கடை, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது.

இதில், எவ்வாறு மக்கள் பணியாற்ற வேண்டும் என கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கான பணிகள் திட்டமிடுதல் எடுத்துகொள்ளப்பட உள்ளது. முதல்வரிடம் சிறப்பு நிதி பெற உள்ளது. அந்த பணிகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நன்றி என்பது வார்த்தையாக இல்லாமல் திட்டங்கள் மூலம் மக்களுக்கு நன்றியை செலுத்த உள்ளோம். அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்கு வரப்பெற்ற நிதிகள் வேறு பணிக்கு பயன்படுத்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் எந்த திட்டங்களையும் அதிமுகவினர் நிறைவேற்ற வில்லை.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் எந்த விதமான ஒளிவு மறைவு இல்லாமல் சிசிடிவி காட்சிகளோடு வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. மக்கள் அமோக ஆதரவுடன் வெற்றி பெற செய்துள்ளனர். தமிழக முதல்வர் கோவையை தனது தொகுதியாக நினைத்து 234 கோடி ரூபாயை வளர்ச்சி திட்டங்களுக்காக வழங்கியுள்ளார். கோவை இனிமேல் அதிமுகவின் கோட்டையில்லை. எப்போதுமே மு.க. ஸ்டாலின் கோட்டை தான். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Gove ,KKA ,Stalin ,Minister ,Sentylphalaji , ‘‘ Through the projects, to the people, thank you, Senthilpology
× RELATED மாணவர்களாகிய உங்களுக்கு கல்வி எனும்...