×

வீடு தேடி வரும் பூன்பாக்ஸ்

நன்றி குங்குமம் தோழி

கோவிட் பிரச்னை நாட்டையே புரட்டி போட்டுதான் வருகிறது. இதனால் மக்களின் உடல் நலன் பாதிப்பு மட்டுமல்லாமல், பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களும் இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனாலும் இந்த பாண்டமிக் காலத்தில் மக்களின் தேவை என்ன என்று அறிந்து அதையே தன்னுடைய தொழில் யுக்தியாக மாற்றியுள்ளார் பூன் பாக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராமசந்திரன் ராமநாதன்.

‘‘கல்லூரி படிப்பை முடித்த கையோடு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் வேலை பார்த்து இருக்கேன். கடைசியாக டி.வி.எஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது தான், பேராசிரியர் டாக்டர் சி.கே.பிரஹலாத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் எங்க நிறுவனத்தில் ஆர்க்கிடெக்ட் ஸ்டாடர்ஜி என்ற பணியினை பார்த்து வந்தார். அதனால் பணி நிமித்தமாக அவருடன் நானும் பல கிராமங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. நாம் நகர வாழ்க்கைக்கு பழகிவிட்டதால், கிராம மக்களின் வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது. சில கிராமங்களில் மின்சார வசதி இல்லை. தெரு விளக்கு மட்டும் தான் இருக்கும்.

வீட்டில் மின்சாரம் இருக்காது. அது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தொழில்நுட்பம் பற்றிய போதிய விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தது. அந்த சமயத்தில்தான் எனக்கு நகர மக்களை டார்கெட் செய்வதை போல் இவர்களை ஏன் என்னுடைய வாடிக்கையாளராக மாற்ற கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அது குறித்த ஆய்வில் இறங்கினேன். அவர்களின் அத்தியாவசிய தேவை என்ன என்று ஒரு பட்டியல் எடுத்தேன். அதை எவ்வாறு பூர்த்தி செய்யலாம்னு திட்டமிட்டேன். அதில் உருவானதுதான் பூன்பாக்ஸ்’’ என்றவர் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு இதில் முழுமையாக ஈடுபடுத்த துவங்கியுள்ளார். ‘‘பொதுவாகவே பெரிய பெரிய பிராண்ட் நிறுவனங்கள் எல்லாரும் நகர மக்களை தான் டார்கெட் செய்றாங்க. ஆனால் கிராமங்களில் பெரிய மார்க்கெட் இருப்பதை மறந்திடுறாங்க. அங்கு தான் இதன் தேவை அதிகமாக உள்ளது.

ஆரம்பத்தில் மின்சாரம் இல்லாத காரணத்தால், நாங்க சோலார் விளக்குகளை சப்ளை செய்ய ஆரம்பித்தோம். அது எங்களுக்கு பெரிய அளவில் சக்சஸ் கொடுத்தது. அதன் பிறகு அந்த மக்களுக்கு சரியான முறையில் விழிப்புணர்வு கொடுத்தால், அங்கும் ஒரு வாடிக்கையாளர் வட்டத்தினை ஏற்படுத்த முடியும்ன்னு தெரிய வந்தது. இப்போது கிராமங்களிலும் மின்சாரம் சப்ளை இருப்பதால், அவர்கள் சோலார் விளக்குகளை தாண்டி அடுத்த கட்டமாக டி.வி, ஃபிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர்னு விரும்பினாங்க. சிலர் சமையல் பாத்திரங்கள், ஸ்மார்ட் போன்கள் கூட எதிர்பார்த்தாங்க. அவர்களின் ஒவ்வொரு தேவையினையும் இந்த ஏழு வருடங்களில் பூர்த்தி செய்து வந்துள்ளோம். தற்போது எங்களுக்கு 3 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்காங்க’’ என்றவர் இவர்களின் தேவையினை எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதை விவரித்தார். ‘‘பெரும்பாலும் கிராமங்களில் இது போன்ற பிராண்டெட் பொருட்கள் குறித்த கடைகள் இருக்காது. அப்படி இருந்தாலும் அவங்க நகரத்திற்கோ அல்லது தாலுகாவிற்கோ வரவேண்டும். அங்கும் குறைந்த அளவில் தான் பொருட்கள் இருக்கும்.

இதற்காக அவர்கள் குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் பயணம் செய்து, வாங்க முன்வந்தாலும், அதை அவர்கள் வீட்டில் டெலிவரி செய்ய கட்டணம் செலுத்தணும். அந்த ஒரு காரணத்திற்காகவே வாங்க வசதி இருந்தும் தவிர்த்துவிடுகிறார்கள். அந்த இடத்தினை நாங்க நிரப்ப நினைத்ேதாம்’’ என்றவர் இவர்களுக்காகவே ஒரு ஆப் ஒன்றை அமைத்து அதன் மூலம் பொருட்களை டெலிவரி செய்து வருகிறார். ‘‘முதலில் எங்க நிறுவனத்திற்கான ஆப் ஒன்றை தயார் செய்தோம். அதன் பிறகு அனைத்து புகழ் பெற்ற பிராண்ட் நிறுவனங்களுடன் இணைத்தோம். வாஷிங்மெஷின் முதல் சமையல் பாத்திரங்கள் வரை அனைத்து பொருட்களும் எங்க ஆப்பில் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு  ஏஜென்டினை நியமித்தோம். அவங்களின் வேலையே வாடிக்கையாளர்களை அறிந்து அவர்களின் தேவையினை பூர்த்தி செய்வது தான். ஏஜென்டுகளின் போனில் பூன்பாக்ஸ் ஆப் இருக்கும். அதில் குறிப்பிட்டுள்ள பொருட்களை பார்த்து அவங்க ஆர்டர் செய்வாங்க. அதன் பிறகு ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் இன்ஸ்டாலேஷன் என அனைத்தும் நாங்க பார்த்துக் கொள்வோம்.

எங்களின் டார்கெட் கிராமத்தில் உள்ள நடுத்தர குடும்பங்கள் தான்’’ என்றவர் கோவிட் காலத்திற்கு ஏற்ப தங்களின் தொழில் முறையினையும் மாற்றி
அமைத்துள்ளார். ‘‘இந்தியா முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நகர மக்களே அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே திண்டாடுகின்றனர். இதனால் இவர்களுக்கு தற்போதைய தேவையான மளிகை, மருந்து, சானிடேஷன் மற்றும் காய்கறி போன்ற பொருட்களை ஆர்டரின் பேரில் வீட்டுக்கே சப்ளை செய்து வருகிறோம். எங்களுக்கு ஏற்கனவே வாடிக்கையாளர்கள் இருப்பதால், அவர்களின் தேவை அறிந்து அதை நிவர்த்தி செய்ய முடிகிறது. தற்போது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஒடிசா போன்ற இடங்களுக்கு நாங்க எங்க சேவையினை செய்து வருகிறோம். கோவிட் பிரச்னைக்கான பாதிப்பு இந்தாண்டு முழுதும் தொடரும் என்பதால், எங்களின் சேவையினை மற்ற மாநிலங்களில் இருக்கும் கிராமங்களுக்கும் செயல்படுத்தும் எண்ணம் உள்ளது’’ என்றார் ராமசந்திரன் ராமநாதன்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Poonbox ,house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்