அரவக்குறிச்சி பகுதியில் தெருநாய் தொல்லையால் மக்கள் அவதி: கட்டுப்படுத்த வலியுறுத்தல்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. தெருவில் வருபவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் கருத்தடைமுகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி தர்ஹாதெரு, மாரியம்மன் கோவில் தெரு, அம்மன்நகர், பள்ளிவாசல் தெரு, கலைவாணர் தெரு பாவாநகர் பொன்நகர், மார்கெட் தெரு. சுப்ரமணிசுவாமி கோவில் பின்புறம், பெரியகடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு தொல்லைக்கு ஆளாகின்றனர்.

தெருநாய்கள் சிறுமிகள் மற்றும் முதியவர்களைக் கண்டால் சத்தத்துடன் திடீரென்று தெருவில் நடந்து செல்லும் போது துரத்துகின்றன. இதனால் அலறியடித்துக் கொண்டு ஓடும் போது அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். சிலரை கடித்து விடவும் செய்கின்றன. பைக்கில் செல்பவர்களை துரத்துவதால் சிறு சிறு விபத்துகளும் ஏற்படுகின்றது. இரவில் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு அவைகளுக்குள் கடித்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் ஊளையிடுகின்றன.

இந்த பயங்கர சத்தத்தினால் குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியமால் அவதிப்படுகின்றனர். இதனால் அரவக்குறிச்சி பகுதியில் பொதுமக்கள் பகல் இரவு என்றில்லாமல் தெருவில் நடமாட அச்சப்படும் வகையில் அதிகரித்துள்ள தெருநாய்களை கட்டுப்படுத்தவும் ஒழிக்கவும் கருத்தடை முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: