சட்டமன்ற தேர்தல்களை தொடர்ந்து பாமக மாநிலப்பொருளாளர் வார்டு தேர்தலிலும் தோல்வி: டெபாசிட்டும் பறிபோனதால் கட்சியினர் அதிர்ச்சி

சின்னாளபட்டி: பாமக மாநில பொருளாளர் ஏற்கனவே 2 முறை சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்திருந்த நிலையில், தற்போது வார்டு தேர்தலிலும் தோல்வியடைந்து டெபாசிட்டை இழந்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்மாவட்டங்களில் பாமகவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், மாநில இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த திலகபாமாவை, கட்சியின் மாநில பொருளாளராக நியமனம் செய்தனர். அதோடு 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் நிற்க வாய்ப்பும் அளித்தனர். இத்தேர்தலில் திலகபாமாவுக்கு 5வது இடமே கிடைத்தது.

தொடர்ந்து திலகபாமா, 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்டார். இத்தேர்தலில் திமுக வேட்பாளரான ஐ.பெரியசாமி 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் கூடுதலாக பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். திலகபாமா 30,238 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது சொந்த ஊரான சிவகாசியில் 47வது வார்டில் பாமக சார்பில் போட்டியிட்டார்.  இந்த தேர்தலிலும் இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெயராணியை விட 424 வாக்குகள் குறைவாக பெற்று படுதோல்வி அடைந்ததோடு டெபாசிட்டையும் இழந்தார். இத்தேர்தலில் இவருக்கு 10.3 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இவரை விட சுயேச்சை வேட்பாளர் சந்திரா 346 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தது குறிபிடத்தக்கது.

பாமகவின் மாநில பொருளாளர் 2016, 2021 ஆகிய இரு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததோடு, வார்டு தேர்தலிலும் டெபாசிட் இழந்தது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுபோல திண்டுக்கல் மாநகராட்சி உள்பட தென்மாவட்டங்களில் பாமக சார்பில் ேபாட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: