வீட்டில் பதுக்கிய 1,100 கிலோ குட்கா பறிமுதல்: கமுதி அருகே பரபரப்பு

கமுதி: கமுதி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வேடங்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சபரிராஜா. இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கமுதி டிஎஸ்பி மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டிஎஸ்பி உத்தரவின்பேரில் கமுதி குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் விரைந்து சென்று சபரிராஜாவின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 25 மூட்டைகளில் 1,100 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் இருந்தன.

அவற்றை உடனடியாக போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மூட்டைகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த ரூ.7.66 லட்சம் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சபரிராஜாவை தேடி வருகின்றனர்.

Related Stories: