×

மரக்காணம் அருகே தேர்தல் முன்விரோதம் அதிமுகவினர் தாக்கியதில் திமுக பிரமுகர் உள்பட 10 பேர் படுகாயம்-போலீசார் தீவிர விசாரணை

மரக்காணம் : மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்டது அழகன்குப்பம், வசவன்குப்பம் மீனவ கிராமங்கள். இங்குள்ள 1வது வார்டில் நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலில் திமுக சார்பில் விக்னேஷ், அதிமுக சார்பில் பாண்டியன், சுயேட்சையாக வேலு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சுயேட்சையாக போட்டியிட்ட வேலு வெற்றி பெற்று திமுகவில் இணைந்துவிட்டார். இந்நிலையில் வேலுவின் வெற்றிக்கு வசவன்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த திமுக மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் பாபுதான் காரணம் என்று கூறி அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் சந்திரன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் தடி, இரும்பு பைப் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சென்று பாபுவின் வீட்டை தாக்கியுள்ளனர்.

இதனை பார்த்த பாபு வீட்டில் இருந்து வெளியில் வந்துள்ளார். அப்போது சந்திரனின் ஆதரவாளர்கள் பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பாபு படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த பாபுவின் ஆதரவாளர்கள் பாரத்குமார், தமிழ்மணி, வினோத், அருள்குமாரி ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது ஆயுதங்களுடன் இருந்த சந்திரனின் ஆதரவாளர்கள் அவர்களையும் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பாபுவின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு சந்திரனின் ஆதரவாளர்களை தாக்கியுள்ளனர். இதில் சந்திரனின் ஆதரவாளர்களில் ஒரு சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த இரு கோஷ்டிகளை சேர்ந்த குப்பல் தப்பி ஓடிவிட்டது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த அனைவரும் மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக இரு கோஷ்டிகளையும் சேர்ந்தவர்கள் தனித்தனியாக மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் டிஎஸ்பி அருண் தலைமையில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் மேற்கொண்டு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் மீனவர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Dimuka Pramkar ,Marakkana , Marakkanam: Alakkankuppam and Vasavankuppam fishing villages are under the jurisdiction of Marakkanam. The municipality, which ended up in the 1st Ward here
× RELATED ஏலம் விட்ட காரில் மண்டை ஓடு காவல் நிலையத்தில் பரபரப்பு