×

சார்ஜாவிலிருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திய ரூ.2.59 கோடி தங்கம் பறிமுதல்-பெண் உள்பட 4 பேர் கைது

பீளமேடு : விமானம் மூலம் சார்ஜாவிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள 4.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.சார்ஜாவிலிருந்து கோவைக்கு நேற்று காலை ஏர் அரேபியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக கோவையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ)அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் டிஆர்ஐ அதிகாரிகள் அதிரடியாக விமான நிலையத்துக்குள் புகுந்து சார்ஜாவிலிருந்து வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் உள்பட 4 பயணிகள் தங்கள் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பெண் காலில் பொருத்தியிருந்த செயற்கை மூட்டு ஆகியவற்றில் தங்கம் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 4 பேரையும் தனியாக அழைத்துச் சென்று டிஆர்ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த உமா (34), கடலூரை சேர்ந்த பி.பாரதி (23), தஞ்சாவூரை சேர்ந்த திருமூர்த்தி  (26), திருச்சியை சேர்ந்த விக்னேஷ் கணபதி(29) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.2 கோடியே 59 லட்சம் மதிப்புள்ள 4.9 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது குறித்து டிஆர்ஐ அதிகாரிகள் கூறியதாவது: தங்கம் கடத்தி வந்த 4 பேரில் 3 பேர் சார்ஜாவில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வருகிறார்கள். ஒரு  பெண் மட்டும் உடல்நிலை சரியில்லாத உறவினரை பார்ப்பதற்காக சார்ஜா சென்றுள்ளார்.

சார்ஜாவில்  தங்கம் வாங்குவதற்காக அவர்களுக்கு பணம் கிடைத்தது எப்படி? தங்களுக்காகத்தான் தங்கம் கடத்தி  வருகிறார்களா? அல்லது வேறு யாருக்காவது தங்கம் கடத்தி வந்தார்களா? பின்னணியில் யாராவது உள்ளார்களா? என்பன போன்ற விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் ஸ்கேனரில் கண்டுபிடிக்க முடியாத  வகையில் தங்கத்தை பசையாக்கி கொண்டு வந்துள்ளனர். இருந்தபோதிலும் அவை கைப்பற்றப்பட்டுவிட்டது.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Tags : Sharjah ,Coimbatore , Peelamedu: 4.9 kg of gold worth Rs 2 crore 59 lakh smuggled from Sharjah to Coimbatore was seized.
× RELATED ஷார்ஜாவில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா தொடங்கியது..!!