×

மகா சிவராத்திரியையொட்டி மயிலை கபாலீஸ்வரர் கோயில் மைதானத்தில் 12 மணிநேர பிரமாண்ட கலை நிகழ்ச்சி: 40 ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு; அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: மகா சிவராத்திரியையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ராமகிருஷ்ணா மட சாலையில் உள்ள  78 கிரவுண்ட் விளையாட்டு மைதானத்தில் 12 மணி நேர சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் நாளை சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் அறநிலையத்துறை வரலாற்றில் முதன்முறையாக மகா சிவராத்திரியன்று 100க்கும் மேற்பட்ட ஆன்மிக கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2ம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.

மகா சிவராத்திரி அன்று ஆன்மிகம் தொடர்பான மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற உள்ளன. ஆன்மிகம் தொடர்பான 10 விற்பனையகங்கள் அமைக்கபட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பழநி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட முக்கிய கோயில்களின் பிரசாதங்களும் விற்பனை செய்யப்பட உள்ளது. முக்கிய கோயில்களின் தலபுராணம், தல வரலாறு, கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை மாடவீதிகளில் நிறுத்திக் கொள்ளலாம்.

நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களில் கோயில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி அரங்கில் 3000 பேர் அமர்வதற்கு இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை ரூ.2042 கோடி மதிப்பிலான கட்டிடங்கள், நிலங்கள், குளங்கள்  ஆகியவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட  இடங்களில் ‘எச்ஆர்சிஇ’ என்ற அடையாள கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

எட்டுக் கால் பாய்ச்சலில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கவனத்திற்கு வருவதையும், வராததையும் கவனித்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  சிதம்பரம் கோயில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் விரும்ப தகாத சம்பங்கள் நடப்பதாக இந்து சமய அறநிலைய துறைக்கு கவனத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறது. சட்ட வல்லுனர்களோடு ஆலோசித்து முதல்வரின் உத்தரவின் பெயரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Mayilai Kabaliswarar Temple Grounds ,Maha Shivaratri ,Minister of Charity ,Sekarbabu , 12-hour grand art show at Mayilai Kabaliswarar Temple Grounds on the occasion of Maha Shivaratri: 40,000 devotees expected; Information from the Minister of Charities Sekarbabu
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்