கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவருக்கான கலையியல் பிரிவு ஒதுக்கீட்டில் 37 இடங்கள் நிரம்பின: கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தகவல்

சென்னை: கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலையியல் பிரிவு ஒதுக்கீட்டில் 37 இடங்கள் நிரம்பியுள்ளன. சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெறும் என்று கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில், இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு என்ற பி.வி.எஸ்சி., ஏ.ஹெச் படிப்புக்கு 408 இடங்கள் உள்ளன. அதேபோன்று உணவு, கோழியின, பால்வள தொழில்நுட்ப படிப்புகளுக்கு 96 இடங்கள் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கலையியல் பிரிவில் பி.வி.எஸ்சி., ஏ.ஹெச் படிப்புக்கு 29 இடங்களும், பி.டெக்., படிப்புக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இதற்கான கவுன்சலிங் சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் நேற்று நடந்தது. இதில், ஒதுக்கீட்டில் இருந்த 37 இடங்களும் நிரப்பின. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவில் 40 இடங்கள் உள்ளன.

மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் தொழிற்கல்வி பிரிவில் உள்ள இரண்டு இடங்கள் என 42 இடங்களுக்கான கவுன்சலிங் இன்று நடக்கிறது. மேலும் பொது பிரிவினர் கவுன்சலிங் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. அதன்படி வரும் 28ம் தேதி காலை 10 முதல் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். மார்ச் 5ம் தேதி சேர்க்கை ஆணையை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து 16ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிக்கு நேரடியாக சென்று அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று கால்நடை மருத்துவ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: