×

அறநிலையத்துறை கட்டிட, நில வாடகை நிலுவையை வசூலிக்க சொத்துக்களை கையகப்படுத்துவது, ஏலம் விடுவது தொடர்பாக புதிய வழிகாட்டி நடைமுறை வெளியீடு: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

* ஏலம் நடைபெறும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும்

சென்னை: அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்களின் வாடகை நிலுவை தொகையை வசூலிக்கும் வகையில் சொத்துக்களை கையகப்படுத்துவது, ஏலம் விடுவது தொடர்பான புதிய வழிகாட்டி நடைமுறை வெளியிட்டு ஆணையர் குமரகுருபரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* வாடகை நிலுவை செலுத்தத் தவறியவரின் பெயர், முகவரி, அவருக்கு வாடகைக்கு விடப்பட்ட சொத்தின் விவரம், எந்த தேதியிலிருந்து வாடகை நிலுவையாக உள்ளது என்ற விவரம், மொத்த நிலுவைத் தொகையின் விவரம், நிலுவைத்தொகையினை செலுத்தக்கோரி அவருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டதற்கான விவரம் மற்றும் அவருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகளின் விவரங்கள் (அசையாச் சொத்துக்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்) சம்பந்தப்பட்ட கோயில் அறங்காவலர்கள்/செயல் அலுவலர்கள் இணை ஆணையருக்கு அனுப்பிட வேண்டும்.
* அசையும் சொத்துக்களில் அன்றாடத் தேவைக்கான நகைகள், சமையல் பாத்திரங்கள், படுக்கைகள். தலையணைகள் மற்றும் மத ரீதியாக அணிய வேண்டிய ஆபரணங்கள், விவசாய கருவிகள், விதைகள் மற்றம் உரங்கள் ஆகியவை சேர்க்கப்படக் கூடாது.

அசையும் சொத்துக்களை ஏலத்தில் விடுதல் :
* உதவி ஆணையர் தனது நியமன உத்தரவின் நகலினை வாடகை செலுத்த தவறிய நபருக்கு வழங்கிட வேண்டும். மறுத்தால் அவரது வீட்டின் கதவில் ஒட்டப்பட வேண்டும்.
* வாடகை நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் அசையும்சொத்துக்களை ஜப்தி செய்யப்படும் என்று குறிப்பிட்டு எழுத்துப்பூர்வதவறியவருக்கு அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.
* குறிப்பிட்ட தேதிக்குள் வாடகை நிலுவையை செலுத்தாவிட்டால் வாடகை நிலுவைத் தொகைக்கு நிகரான மதிப்புள்ள அசையும் சொத்துக்களை கையகப்படுத்த வேண்டும்.
* கையகப்படுத்தப்பட்ட அசையும் சொத்துக்களின் பட்டியலை தயார் செய்து, அதன் நகலினை வாடகை செலுத்த தவறியவருக்கு வழங்கி அதற்கான அத்தாட்சி பெற்று அவற்றை கையகப்படுத்தியதற்கான அறிக்கையினை உதவி ஆணையர், இணை ஆணையருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
* பெண்கள் மட்டும் தனியாக உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை கையகப்படுத்த கூடாது.
* பொது ஏலம், விற்பனை அறிவிப்பு உரிய முறையில் விளம்பரம் செய்யப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள் கழித்து நடத்தப்பட வேண்டும்.
* பொது ஏலத்திற்கு முந்தைய நாள் சூரியன் மறைவதற்கு முன்பாக நிலுவைத் தொகை செலுத்தப்பட்டால் எல அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும்.

அசையா சொத்துக்களை கையகப்படுத்துதல்:
* நிலுவைத் தொகை குறித்து  வாடகை தாரருக்கு 15 நாட்களுக்குள் நிலுவையினை செலுத்த கோரி  இணை ஆணையரால் அறிவிப்பு வெளியிட வேண்டும். நிலத்தினை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பினை அனுப்பிட வேண்டும்.
* இணை ஆணையர், சம்பந்தப்பட்ட சொத்தினை கையகப்படுத்தியதற்கான அறிவிப்பினை  சம்பந்தப்பட்ட நிலத்தில் நன்கு தெரியுமாறு எடுப்பான இடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை மேலாண்மை செய்ய சம்பந்தப்பட்ட கோயில் செயல் அலுலவரை முகவராக நியமனம் செய்ய வேண்டும்.  ஏலம் நடைபெறும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். மேற்கண்ட அறிவிப்பு கிராம சாவடி, காவல் நிலையம் மற்றும் சொத்து அமைந்துள்ள இடம் ஆகியவற்றில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட வேண்டும்.
* சொத்துக்களை ஏலம் எடுத்தவர், உடனடியாக 15% நிலுவைத்தொகையினை செலுத்த வேண்டும். மீதத் தொகையினை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

Tags : Kumarakuruparan , Publication of new guidelines on the acquisition and auction of properties for the purpose of charity building and land rent arrears: Commissioner Kumarakuruparan Order
× RELATED கோயில் சொத்துக்களை முறைப்படுத்த...