சென்னை: ராயபுரத்தில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று ராயபுரத்தில் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 110 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள். கிட்டத்தட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று ஜெயக்குமாரை ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலும் காவல்துறையினர் பெற்றார்கள்.
இந்நிலையில், வழக்கு தொடர்பான ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று ஜார்ஜ் டவுன் 16வது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயக்குமார் தரப்பில், மூத்த வழக்கறிஞர் நடராஜனும், அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவஞானமும் ஆஜராகியிருந்தார். இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. இந்திய ஜனநாயக சட்டம் 188 மற்றும் குற்றவியல் சட்டம் என 2 பிரிவுகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தது. இவ்விரு பிரிவுகளையும் வழக்கில் சேர்க்கக்கூடாது என்று ஜெயக்குமார் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இது ஜாமினில் விடக்கூடிய ஒரு வழக்காக தான் இருக்கிறது என்றும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மார்ச் 9ம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் ஜெய்குமாருக்கு ஜாமீன் வழங்கப்படாததால் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.