புளியந்தோப்பு 72வது வார்டில் போட்டியிட்டு தோல்வி இனிமேல் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்: சினிமா பாடகர் கானா பாலா உருக்கம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் பாலா (எ) கானா பாலா. கானா பாடல்கள் மூலம் பிரபலமான இவர், சினிமாவில் பாடல்களை பாடியும் நடித்தும் உள்ளார். இந்நிலையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புளியந்தோப்பு பகுதியில் 72வது வார்டில் போட்டியிட்டார். எந்த கட்சியிலும் சேராமல் சுயேச்சையாக போட்டியிட்ட பாலா திமுக வேட்பாளர் சரவணனிடம் 2208 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதே வார்டில் 2006ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டு போட்டியிட்டார். இந்த இரண்டு முறையும் இரண்டாவது இடம் பிடித்தார். இந்த முறையும் 6095 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடிக்க முடிந்தது.

இதுகுறித்து கானா பாலா கூறுகையில், `இந்தப் பகுதி நான் பிறந்து வளர்ந்த பகுதி. இந்த பகுதி மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்துள்ளேன். அதனால்தான் இந்த பகுதியில் நின்று வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மூன்று முறையும் இரண்டாவது இடமே எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நான் சோர்ந்து போகவில்லை. தொடர்ந்து பாடல்கள் பாடுவதிலும் எனது தொழிலிலும் ஈடுபடுவேன். இனி தேர்தலில் நிற்கும் எண்ணம் எனக்கு கிடையாது.

இளைஞர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளட்டும். அரசியல் கட்சிகளில் சேர்ந்து சீட் வாங்கி இருந்தால் வெற்றி பெறலாம் என பலரும் தெரிவித்தனர். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் இனி தேர்தலில் நிற்கும் எண்ணம் இல்லை. எனக்கு வழங்கப்பட்ட கிட்டார் சின்னத்தை 7 நாட்களுக்குள்  இப்பகுதி மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்த்துள்ளேன். அதன் விளைவாகவே 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எனக்கு வாக்களித்துள்ளனர். வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றி’ என தெரிவித்தார்.

Related Stories: