×

உள்ளாட்சி தேர்தலில் பணத்தால் கிடைத்த பாஜ ஓட்டுகள்: பாமக, நாதக, மநீம விமர்சனம்

சென்னை:தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  பாஜ அங்கொன்றும்,  இங்கொன்றுமாக வென்றுள்ளது.  அதனை பாஜ நிர்வாகிகள், ‘இந்த வெற்றி பாஜ பெற்றுள்ள வளர்ச்சியின் அடையாளம். தமிழகத்தின் 3வது பெரிய கட்சி பாஜக’ என்று கூறிக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் பரவலாக மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள கட்சிகள்  ‘பாஜகவின் வளர்கிறேனே மம்மி’ பாணி கருத்தை  காமெடியாகவும், அலட்சியமாகதான் பார்க்கின்றன. இன்னும் அந்த கட்சியை தமிழகத்தில் ‘டம்மி’யாகதான் பார்க்கிறார்கள்.

 இந்நிலையில்  பாட்டாளி மக்கள் கட்சி  செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர்  கே.பாலு, ‘பாமக  வடக்கே கும்மிடிபூண்டி முதல்  பெரியகுளம், குழித்துறை என கன்னியாகுமரி வரை வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஆனால் பாஜ  கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டுமே வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் தமிழகத்தின் 3வது பெரியக் கட்சியாக அது உருவெடுத்துள்ளது என்பதை ஏற்க முடியாது.  பாமக மட்டுமே கடந்த 30 ஆண்டுகளாக 3பெரிய கட்சியாக, தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக நீடித்து வருகிறது. எனவே பாஜ வளர்ந்து வருகிறது என்ற கருத்து தவறானது’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 அதேபோல் நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் என்.சந்திரசேகரன், ‘மொத்த வாக்குகள் எவ்வளவு, அவற்றில் கட்சி வாரியாக எவ்வளவு வாக்குகள் என்று தெரியும் வரை கதை சொல்பவர்கள் காத்திருக்க வேண்டும். பாஜ கூட  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருக்கிறது. வாக்காளர்களுக்கு கொடுத்த பணமே அந்த கட்சிக்கு கிடைத்த  வெற்றிக்கு காரணம். அதற்கு பாஜ வளர்ந்து விட்டது என்று அர்த்தமில்லை’ என்று சாடியுள்ளார். மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ், ‘ பணத்தால் கிடைத்த வெற்றியை வைத்துக் கொண்டு கட்சி வளர்ந்து விட்டது என்று சொல்ல முடியாது. தொடர்ந்து எங்கள் கட்சிதான் மாற்று சக்தியாக இருக்கும்.’ என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு பாஜ தம்பட்டம் அடித்துக் கொள்வதை ஏற்க முடியாது என்று கூறியதோடு, அக்கட்சி வளரவே இல்லை என்றும் விமர்சித்துள்ளனர்.

Tags : Paja ,Bamaka ,Nadaka , Local elections, BJP vote, pmk, Nathaka, Manima criticism
× RELATED பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...