தோல்விகள் மக்கள் பணியை பாதிக்காது: கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக உழைத்த கட்சியின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியை தொடருங்கள். உங்களை வெற்றி பெற செய்யாததை நினைத்து வருந்துமளவிற்கு சேவையாற்றுங்கள். நாம் அரசியலுக்கு வந்தது மக்கள் பணி செய்வதற்குத்தான்.உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாமல் தடுமாறியபோது நேர்மை அரசியலுக்கு இயன்றதைத் தாருங்களென மக்களிடமே கோரிக்கை விடுத்தோம்.

தங்களால் இயன்ற பங்களிப்பை செய்தவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. தோல்விகள் இரண்டு வகைப்படும். ஒன்று திருத்திக் கொள்ள வாய்ப்பில்லாதவை. மற்றொன்று திருத்திக் கொண்டு வெற்றியை நோக்கி முன்னகரும் வாய்ப்புள்ளவை. நாம் சந்தித்திருக்கும் பின்னடைவு இரண்டாம் வகை. என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என நான்காண்டுகளுக்கு முன் நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல.இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

Related Stories: