தாவூத் இப்ராகிம் பண பரிவர்த்தனையில் தொடர்பு மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் திடீர் கைது: அமலாக்கத் துறை அதிரடி

மும்பை: சர்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராகிமுடன் தொடர்புள்ள நிழல் உலக தாதாக்களின் பண பரிவர்த்தனை மோசடி தொடர்பான வழக்கில் மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர். நிழல் உலக தாதாக்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு நெருக்கமானவர்கள் மீது, பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

ஹவாலா முறையில் பண பரிமாற்றம் செய்ததாக எப்ஐஆரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 15ம் தேதி தாவூத்தின் சகோதரி, மறைந்த ஹசீனா பார்க்கரின், வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட தாவூத்தின் தம்பி இக்பால் கஸ்கரை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் மைத்துனர் சலீம் புரூட் என்ற சலீம் குரோஷி, ஹசீனா பார்க்கரின் மகன் சலீம் குரேஷி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக்கிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கான சம்மன் அனுப்பாமலும், முன் அறிவிப்பு இல்லாமலும் அமலாக்கத் துறையினர் மாலிக்கின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவரை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது, வெற்றி சின்னமான இரட்டை விரலை காட்டி,  ஆவேசமாக கோஷமிட்டார். ‘வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம். அடிபணியமாட்டோம்’ என்று கூறினார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாஜ.வுக்கும், ஒன்றிய அரசுக்கும் எதிராக மாலிக் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளையும்ப விமர்சனங்களையும் கூறி வந்தார். இந்நிலையில் அவர் அமைச்சர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தலைவர்கள் கண்டனம்

அமைச்சர் நவாப் மாலிக்கின் கைதுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா, காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘சமூக ஆர்வலர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அவர் தாவூத் இப்ராகிமின் ஆள் என்று கூறி ஏதாவது ஒரு வழக்கில் நடவடிக்கை எடுக்கிறார்கள்,’ என்று சரத் பவார் குற்றம்சாட்டினார். நவாப் மாலிக் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர்.

Related Stories: