×

மலையாள நடிகை லலிதா மரணம்

திருவனந்தபுரம்: மலையாள நடிகையும், மறைந்த இயக்குனர் பரதனின் மனைவியுமான லலிதா உடல்நலக்குறைவுகாரணமாக கொச்சியில் மரணம் அடைந்தார். மலையாள சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர்  கே.பி.ஏ.சி. லலிதா (74). அவரது இயற்பெயர் மகேஸ்வரி. இளம் வயதிலேயே நடனத்தில் ஆர்வம் கொண்ட அவர், பிறகு நாடகங்களில் நடிக்க தொடங்கினார். கேரளாவில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய கே.பி.ஏ.சி. என்ற நாடக கம்பெனி யில் சேர்ந்து நடிக்க தொடங்கினார். பிறகு அவரது பெயர் கே.பி.ஏ.சி. லலிதா என்று மாற்றப்பட்டது.

1969ல் பிரபல டைரக்டர் சேதுமாதவன் இயக்கிய கூட்டு குடும்பம் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து திரிவேணி, அனுபவங்கள் பாளிச்சகள், சுயம்வரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தார். சத்யன், பிரேம் நசீர், மது, மம்முட்டி, மோகன்லால் என மலையாள படவுலகில் லலிதா சேர்ந்து நடிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம். ஏராளமான மலையாள டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை மற்றும் அலைபாயுதே, காற்று வெளியிடை, பரமசிவன், கிரீடம் ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், கடைசி யாக  மாமனிதன் என்ற படத்தில் நடித்தார்.

மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 2 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும், 4 முறை சிறந்த துணை நடிகைக்கான கேரள அரசு விருதும் அவருக்கு கிடைத்துள்ளது. 1978ல், மறைந்த பிரபல இயக்குனர் பரதனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லலிதா கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கொச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் உள்பட மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். லலிதாவுக்கு சித்தார்த் சிவா என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சித்தார்த் சிவா மலையாள பட இயக்குனராக இருக்கிறார். லலிதாவின் உடல் நேற்று மாலை வடக்காஞ்சேரியில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


Tags : Lalita , Malayalam actress Lalita dies
× RELATED சகலமும் தரும் லலிதா சகஸ்ரநாமம்