×

முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்: லக்னோவில் லக லக!

லக்னோ: இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, லக்னோ வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது. 2வது, 3வது போட்டிகள் பிப்.26, 27 தேதிகளில்  தர்மசாலாவில் நடக்க உள்ளன. முதல் டெஸ்ட் மார்ச் 4ம் தேதி மொகாலியிலும், 2வது டெஸ்ட் மார்ச் 12ம் தேதி பெங்களூருவிலும் தொடங்க உள்ளன.

லக்னோ, வாஜ்பாய் கிரிக்கெட் அரங்கில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கும் முதல் டி20ல் ரோகித் தலைமையிலான இந்திய அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. நட்சத்திர வீரர்கள் ஷமி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் இந்தியா உற்சாகமடைந்துள்ளது. சமீபத்திய தொடர்களில் கவனத்தை ஈர்த்த சூரியகுமார் யாதவ், தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளனர். கோஹ்லி, பன்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தாலும், இளம் வீரர்கள் ஷ்ரேயாஸ், வெங்கடேஷ், இஷான், ஹூடா ஆகியோர் கை கொடுக்க காத்திருக்கின்றனர்.

அதே சமயம், குசால் மென்டிஸ், நிசங்கா, சண்டிமால், கருணரத்னே ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால், இலங்கை அணியும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. வனிந்து ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது அந்த அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்திருந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த கடைசி டி20ல் ஆறுதல் வெற்றியுடன் ஒயிட்வாஷ் ஆவதை தவிர்த்தது, இலங்கை வீரர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது. இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களமிறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் மோதிய கடைசி 5 டி20ல் இந்தியா 3, இலங்கை 2 ஆட்டங்களில் வென்றுள்ளன.
* கடந்த ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
* இதுவரை மோதிய 22 டி20 ஆட்டங்களில் இந்தியா 14 ஆட்டங்களிலும், இலங்கை 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்துள்ளது.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான், யஜ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெயிக்வாட், தீபக் ஹூடா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன்.

இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), சரித் அசலங்கா (துணை கேப்டன்), பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், தனுஷ்கா குணதிலகா, கமில் மிஷ்ரா, ஜனித் லியனாகே, சமிகா கருணரத்னே, லாகிரு குமாரா, துஷ்மந்த சமீரா, பினுரா பெர்னாண்டோ, ஷிரன் பெர்னாண்டோ, மஹீஷ் தீக்‌ஷனா, ஜெப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, ஆஷியன் டேனியல்.

Tags : India ,Sri Lanka ,Laka Laka ,Lucknow , India-Sri Lanka clash in first T20 match today: Lucknow in Lucknow!
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு