×

சத்தீஸ்கருடன் தமிழகம் பலப்பரீட்சை

கவுகாத்தி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் எலைட் எச் பிரிவில், தமிழகம் தனது 2வது லீக் போட்டியில் சத்தீஸ்கரை சந்திக்கிறது. இப்போட்டி, கவுகாத்தி நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் சுற்று லீக் ஆட்டங்கள் பிப்.17 முதல் பிப்.20ம் தேதி வரை நாட்டின் 12 நகரங்களில் நடைபெற்றன. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் சுற்றில் 30 சதங்கள், 3 இரட்டைச்சதங்கள் மற்றும் ஒரு முச்சதமும் விளாசப்பட்டன. மொத்தம் 38 அணிகள் களமிறங்கியுள்ள இந்த தொடரில், எலைட் சி பிரிவில் உள்ள புதுச்சேரி, கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், ரயில்வே அணிகள் மோதும் ஆட்டங்கள் சென்னையில் நடக்கின்றன.

கவுகாத்தியில், எலைட் எச் பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு, டெல்லி, சத்தீஸ்கர், ஜார்கண்ட் அணிகள் விளையாடுகின்றன. தமிழகம் தனது முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியுடன் மோதியது. ஆட்டம் டிராவில் முடிந்தாலும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகளும், டெல்லிக்கு ஒரு புள்ளியும் கிடைத்தன. சத்தீஸ்கர் தனது முதல் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால், 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் 2வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. கவுகாத்தி நேரு அரங்கில் தமிழ்நாடு - சத்தீஸ்கர் அணிகள் மோதுகின்றன. சத்தீஸ்கரை விட அனைத்து வகையிலும் வலுவாக உள்ளதால்  தமிழக அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும், கவனமாக விளையாட வேண்டியது அவசியம்.

டெல்லிக்கு எதிரான போட்டியில் அசத்திய கவுசிக் காந்தி, பாபா இந்திரஜித், ஷாருக்கான், ஜெகதீசன், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் இந்த போட்டியிலும் சிறப்பாகப் பங்களிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். முதல் போட்டியில் வென்று 6 புள்ளிகளை முழுமையாக தட்டிச் சென்று முன்னிலை வகிக்கும் சத்தீஸ்கர் அணியும் தமிழக அணிக்கு சவால் விடுக்கும் முனைப்புடன் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்த போட்டியில் வெற்றியை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்துகட்டுகின்றன.


Tags : Tamil Nadu ,Chhattisgarh , Tamil Nadu multi-examination with Chhattisgarh
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...