×

‘விசில் ப்ளோயர்’ சட்டத்தை அமல்படுத்தும்படி நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட முடியாது: டெல்லி ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லி குருதேக் பகதுார் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி முகமது அஜாசுர் ரகுமான் சார்பில் வழக்கறிஞர் பாயல் பஹல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘ஊழல்களை அம்பலப்படுத்துவோரை (விசில் ப்ளோயர்ஸ்) பாதுகாப்பதற்கு கடந்த 2014ம் ஆண்டு, ஊழல் ஒழிப்போர் பாதுகாப்பு சட்டத்தை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், அந்த சட்டத்தை இன்னும் அரசிதழில் வெளியிடாததால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. எனவே, அதை அமல்படுத்தும் வகையில் அரசிதழில் வெளியிட உத்தரவிட வேண்டும்,’ என்று கோரினார்.  

இந்த மனு தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஜோதி சிங் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள பல்வேறு சட்டங்கள் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. நாடாளுமன்றத்துக்கென சிறப்பு உரிமைகள் உள்ளன. எனவே, குறிப்பிட்ட அந்த சட்டத்தை செயல்படுத்தக் கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. பணம் அச்சடித்தல், ஒரு நாட்டுடன் போர் தொடுத்தல் போன்றவை அரசின் சுதந்திரமான விஷயங்கள். அதேபோல் நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி, அமல்படுத்துவதும் அதன் சுதந்திரமான செயல்பாடுகளில் ஒன்றாகும். எனவே, குறிப்பிட்ட சட்டத்தை கொண்டு வரும்படியோ, அமல்படுத்தும்படியோ நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு உ்ததரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Parliament ,Delhi High Court , Parliament cannot order enforcement of 'Whistleblower' Act: Petition dismissed in Delhi High Court
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...