கும்மிடிப்பூண்டியில் தேர்தலில் முறைகேடு என கூறி 11 வேட்பாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் 1வது வார்டு, 2வது வார்டு, 7வது வார்டு, 13வது வார்டில் முறைகேடு நடந்ததாக கூறி வேட்பாளர்கள் நேற்று கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி முதல் வார்டில் தேர்தல் நாளன்று 1 ஆண்கள் வாக்கு சாவடியில் 562 ஓட்டுகளும், 1 பெண்கள் வாக்கு சாவடியில் 487 வாக்குகளும் என 1049 வாக்குகள், தபால் வாக்குகள் 4 சேர்த்து 1053 வாக்குகள் பதிவானது. தொடர்ந்து தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட என்.காளிதாஸ் 2 தபால் ஓட்டுகள் உட்பட 862 வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக பாமக வேட்பாளர் எஸ்.அஸ்வின்ராஜ் 2 தபால் வாக்குகள் உள்ளிட்ட 96 வாக்குகளும்,  பாஜ வேட்பாளர் நாகராஜ் 57 ஓட்டுகளும், அமமுக வேட்பாளர் சி.மணிகண்டன் , பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மு.ஆனந்த் தலா 15 ஓட்டுகளும் , அதிமுக வேட்பாளர் மதிவாணன் 6 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வாஹித் 2  வாக்குகளும் பெற்றனர்.

இந்நிலையில் இந்த தேர்தலில் 1 பெண்கள் வாக்கு சாவடிக்கான மின்னனு வாக்கு பதிவு இயந்திரத்தை மாற்றி முறைகேடு செய்ததாக கூறி 1 வது வார்டில் தோற்ற 6 வேட்பாளர்களும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி செயல் அலுவலர் ப.யமுனாவிடம் மனு அளித்தனர். இதேபோல் 2 வது வார்டில் திமுக வேட்பாளர் சகிலா அறிவழகன் 250 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அங்கு தேமுதிக வேட்பாளர் செல்வி ஜெயவேலு 171 ஓட்டுகளும், அதிமுக வேட்பாளர் கலைசெவ்வி 60 ஓட்டுகளும், பாஜக வேட்பாளர் மாலதி விந்தன் 52 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுமதி ரவிஸ்டர் 2 ஓட்டுகளும் பெற்றனர்.

இந்த தேர்தலில் திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தேமுதிக வேட்பாளர் செல்வி ஜெயவேல், பாஜக வேட்பாளர் மாலதி விந்தன் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். இதேபோல் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 7வது வார்டில் 382 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் துர்கேஷ்வரி பாஸ்கர் வெற்றியை எதிர்த்து 331 ஓட்டுகள் பெற்ற பாமக வேட்பாளர் நாகராணி மற்றும் 43 ஓட்டுகள் பெற்ற பாஜ வேட்பாளர் ஸ்ரீஷா ஆகியோரும் தேர்தல் முறைகேடு என தெரிவித்து புகார் அளித்தனர்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 13வது வார்டில் 476 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்ற விமலா அர்ச்சுனனின் வெற்றியை எதிர்த்து 248 ஓட்டுகள் பெற்ற பாமக வேட்பாளர் தீபிகா மணிகண்டன் பேரூராட்சி அலுவலரிடம் புகார்  அளித்தனர். இதுகுறித்து திமுக வேட்பாளர்களிடம் கேட்டபோது இதே தேர்தலில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 4வது வார்டில்  திமுக வேட்பாளர் வெறும் 7 ஓட்டில் தோற்றார். வேறு இரண்டு வேட்பாளர்கள் 50க்கும் குறைவான ஓட்டுகளில் தான் தோற்றனர். நியாயமாக  நடந்த தேர்தலில் திமுகவின் மகத்தான வெற்றியை பொருக்க முடியாமல் அதிமுக, பாமக, பாஜ வேட்பாளர்கள் பொய் புகார் அளித்துள்ளதாக கூறினர்.   

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி முதல் வார்ட் பிரசசனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி முதல் வார்ட் 1 ஆண்கள் மின்னனு வாக்கு பெட்டியில் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பெட்டியில் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பெண்கள் வாக்கு சாவடியில் வாக்கு பதிவிற்கு முன்பேயே அவர்களுக்கான வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு இருந்ததால் , அந்த பெட்டிக்கு பதில் வேறொரு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் அங்கிருந்த அனைத்து கட்சிகளின் முகவர்கள் ஒப்புதலோடு மாற்றி அதில் வாக்கு பதிவு நடந்தது. அதனால் இதில் எந்த முறைகேடும் இல்லை என்றனர்.  கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து பிற வேட்பாளர்களின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: