என்னை 25 நாட்களாக கஷ்டத்தில் ஆழ்த்திய ஒமிக்ரான் ஒரு ‘சைலண்ட் கில்லர்’- சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவலை

புதுடெல்லி: என்னை 25 நாட்களாக கஷ்டத்தில் ஆழ்த்திய ஒமிக்ரான் வைரஸ் ஒரு ‘சைலண்ட் கில்லர்’ என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலையுடன் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் தற்போது புதன் மற்றும் வியாழக் கிழமைகளில்  நேரடி விசாரணையும், திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காணொலி காட்சி மூலமும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க் கிழமையில் பட்டியலிடப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் ஆன்-ரெக்கார்ட் முறையில் விண்ணப்பம் செய்தால், அவர்களுக்கு அந்த நாளில் வீடியோ அல்லது டெலி-கான்பரன்சிங் முறையில் விசாரணையில் பங்கேற்க வசதி  ஏற்படுத்தித் தரப்படும்.

இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இன்று முக்கியமான முறையீட்டை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்; ஒமிக்ரான் வைரஸ் தொற்று மிகவும் லேசான பாதிப்பையே ஏற்படுத்தி உள்ளது’ என்றார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘கொரோனா கட்டுப்பாடுகளால் தற்போது வழக்குகள் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரித்துள்ளன.

ஒமிக்ரான் வைரஸ் ஒரு சைலண்ட் கில்லர் (அமைதியான கொலையாளி) என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். கொரோனா பாதிப்பால் முதல் அலையில் நானும் கஷ்டப்பட்டேன்; ஆனால் 4 நாட்களில் குணமடைந்தேன். தற்போது இந்த அலையில், 25 நாட்கள் வரை சிரமப்பட்டேன். இன்னும் கஷ்டப்படுகிறேன். கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து பார்ப்போம்’ என்றார்.

Related Stories: