×

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி: சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்த நாளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 4 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலும், முன்னதாக திமுக நிர்வாகியைத் தாக்கிய வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயக்குமாரை ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றபோது, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-ஆவது வார்டில் உள்ள சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்குள் திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் நரேஷைப் பிடித்து, அரை நிர்வாணமாக்கி தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக நரேஷ் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் அதிமுக முன்னாள் ஜெயக்குமார் திமுக நிர்வாகியைத் தாக்கியதற்காக அளித்த ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் அளித்துள்ளார். 


Tags : Jayakumar ,George Town Court of Chennai , AIADMK, Minister, Jayakumar, Bail, Discount, Chennai, George Town
× RELATED எண்ணி முடிக்கவே 2...