×

சண்டிகர் மின்துறை தனியார்மயமாக்கலை கண்டித்து வேலைநிறுத்தம்: மருத்துவம், அடிப்படை வசதிகளுக்கு திண்டாடும் ஸ்மார்ட் சிட்டி

சண்டிகர்: மின் வாரியத்தைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சண்டிகர் மின்வாரிய் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள 3 நாள் போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமையன்று தொடங்கிய போராட்டம் 36 மணி நேரமாக நீடிப்பதால் மின்சாரம் இல்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேசம் தவிப்புக்குள்ளாகியுள்ளது .
பல வீடுகளில் தண்ணீர் இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மின் விளக்கு இல்லாமல் போக்குவரத்து ஆபத்தானதாக மாறியுள்ளது. அரசு மருத்துவமனைகள் பலவும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த அறுவை சிகிச்சைகளை மின்சாரம் இல்லாததால் ஒத்திவைத்துள்ளன.

தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை ஜெனரேட்டர் உதவியுடன் மேற்கொள்வதாக சண்டிகர் சுகாதாரத் துறை இயக்குநர் சுமன் சிங் தெரிவித்தார். அதேபோல் மின் துண்டிப்பால் ஆன்லைன் வகுப்புகள் தடைப்பட்டுள்ளது. ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக சண்டிகர் யூனியன் பிரதேச ஆலோசகர் தரம் பால், ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், மின்வாரியம் தனியார்மயமாக்கப்பட்டால் தங்களின் சேவைக் காலம் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் நலன் சார்ந்த விஷயங்களும் மாறும். மேலும், மின் கட்டணம் வெகுவாக உயரும் எனக் கூறுகின்றனர். நேற்று மாலை சண்டிகர் நிர்வாகம், எஸ்மா சட்டத்தின் கீழ் அடுத்த 6 மாதங்களுக்கு மின்வாரிய ஊழியர்கள் எவ்வித போராட்டமும் நடத்தத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்தது. இருப்பினும் ஊழியர்கள் யாரும் இன்றும் பணிக்குத் திரும்பவில்லை. மின் தடையால் தொழில்துறை உற்பத்தியும் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

முன்னதாக நேற்று பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் சண்டிகர் தலைமைப் பொறியாளருக்கு சம்மன் அனுப்பியது. நீதிமன்ற உத்தரவில், சண்டிகரில் பெரும்பாலான பகுதிகள் மின் தடையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளதால், இவ்விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து சண்டிகர் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் மேத்தா, ஊழியர்களின் போராட்டத்தாலேயே மின் தடை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா அரசுகளிடமிருந்து மின் வாரிய ஊழியர்களை அனுப்பிவைக்குமாறு வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

Tags : Chandigarh , Chandigarh, Power, Privatization, Strike, Medical, Infrastructure, Smart City
× RELATED நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு