×

எஸ்எல்பி பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் வார்டு வாரியாக வேட்பாளர்கள், ஏஜெண்டுகளுக்கு அனுமதி

நாகர்கோவில் : நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு எண்ணும் மையத்தில் வார்டு வாரியாக வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் அனுமதிக்கப்பட்டனர்.
 நாகர்கோவில் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையையொட்டி கோர்ட் ரோடு முழுவதும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்படி வேப்பமூடு ஜங்ஷன், டதி ஸ்கூல் ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சுற்றிலும் 5 வார்டுகள், 4-வார்டுகள், 6 வார்டுகள்  என வாக்கு இயந்திரங்களில் எண்ணிக்கையை பொறுத்து எண்ணப்பட்டன. முதல் சுற்றில் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு அடுத்த சுற்றில் எந்த வார்டு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன என ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த வார்டுகளின் வேட்பாளர்கள், ஏஜெண்டுகளை போலீசார் மையத்திற்குள் அனுமதித்தனர்.

 முதலில் எண்ணி முடிக்கப்பட்ட வார்டுகளின் ஏஜெண்டுகளை மையத்திலிருந்து வெளியேற்றினர். மேலும் எந்த வார்டுகளின் வாக்குகள் மேல்தளத்திலும், கீழ்தளத்திலும் எண்ணப்படுகிறது என்ற விவரங்கள் போலீசார் பேரிகார்டு அமைத்து இருந்த இரு பகுதியிலும் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன. அதனால் அங்கு வந்த வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் அதைப் பார்த்து எந்தவித சந்தேகமின்றி உள்ளே செல்லும் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி இருந்தனர்.

டிஐஜி ரோந்து பணி

நாகர்கோவிலில் எஸ்எல்பி பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடந்ததையொட்டி பாதுகாப்பு பணிகளை டிஐஜி  பிரவேஷ்குமார் காரில் இருந்தவாறு பார்வையிட்டார். பின்னர் மாவட்டம்  முழுவதும் சென்று பாதுகாப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதற்கிடையே  நீதிமன்றம் அருகே ஒரு ஒலி பெருக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதில் அறிவிப்புகள் கேட்காததால், பின்னர் ஒலி பெருக்கி மாற்றப்பட்டது.

தபால் ஓட்டில் குளறுபடி

நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் பலர் தபால் வாக்குகளை அளித்து இருந்தனர். இதில் 22 தபால் வாக்குகள் தபால் உறையின் மேல் எந்த வார்டு என குறிப்பிடப்படாமல் இருந்தன. அதனால் வாக்கு எண்ணும் அதிகாரிகள் இந்த தபால் வாக்குகள் யாருக்கு வந்தது என பிரித்துப் பார்த்து எந்தெந்த வார்டுகள் என தெரிவிக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

ரீகவுண்டிங் கேட்ட வேட்பாளர்கள்

நாகர்கோவில் மாநகராட்சி 42வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது வேட்பாளர்கள் சிலர் தங்களுக்கு  முறையாக தெரிவிக்கவில்லை என்று ஆணையரிடம் குற்றம்சாட்டினர். அப்போது  ஆணையர் முறையாக தான் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்குகள் எண்ணப்பட்டு ஏஜெண்டுகளிடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. அவர்களின் பார்வையில் தான்  எண்ணப்பட்டது என தெரிவித்தார்.

உங்களுக்கு சந்தேகமிருந்தால் ரீகவுண்டிங் செய்ய  அனுமதி வழங்கலாம் என்றார். அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் ரீகவுண்டிங் கேட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் வேட்பாளர்கள் ரீகவுண்டிங் வேண்டாம் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து 42வது வார்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அறிவிப்பு போர்டில் எழுத்தப்பட்டன. இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags : SLP School Vote Counting Center , Nagercoil: Ward wise candidates and agents at the counting center set up at SLP School, Nagercoil.
× RELATED பலாப்பழத்தை பறிக்க மரத்தை...