×

11 லட்சம் பார்வையாளர்கள் வருகை புதுச்சேரி ஹூனர் ஹாட் கண்காட்சியில் கோடிக்கணக்கில் பொருட்கள் விற்பனை-ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேட்டி

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற 36வது ஹூனர் ஹாட் சங்கம் கண்காட்சி நிறைவு விழாவில் ஒன்றிய சிறுபான்மையினர் நல அமைச்சரும், மாநிலங்களவை துணை தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி பங்கேற்றார். முன்னதாக, அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி அரசானது கடந்த 7 ஆண்டுகளில் நடத்தி வரும் தேசிய அளவிலான ஹூனர் ஹாட் மூலம் இதுவரை சுமார் 8 லட்சம் கைவினைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளது.

இதில் 50 சதவீதத்துக்கும் மேலான பயனாளிகள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுயசார்பு என்ற அர்ப்பணிப்புடன், இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான, பாரம்பரியமான கலைகள் மற்றும் கைவினை கலைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில், ஹூனர் ஹாட் முக்கிய பங்கு வகிக்கிறது. புதுச்சேரியில் நடந்த இக்கண்காட்சியில் 11 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளதோடு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களை வாங்கியுள்ளனர். அதேபோல், பெரிய அளவில் ஆன்லைன் ஆர்டர்களும் கிடைத்துள்ளன. இந்திய கைவினை கலைஞர்களின் பெருமைமிகுந்த பாரம்பரியத்தை `காத்தல், பேணுதல், மேம்படுத்துதல்’ என்ற நோக்கத்துக்கான முழுமையான மேடையாக ஹூனர் ஹாட் கண்காட்சி விளங்குகிறது. அடுத்த ஹூனர் ஹாட் கண்காட்சி வரும் 25ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதையடுத்து, மத்திய அமைச்சரிடம், ஹிஜாப் விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ஹிஜாப் தொடர்பாக அண்மையில் எழுந்த சர்ச்சைகள் தேவையில்லாதது. இதனால் யாருக்கும் பயனில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுபற்றி பேச வேண்டாம். புதுச்சேரியில் வக்பு வாரிய குழு அமைப்பது தொடர்பாக, முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்விக்கொள்கையை பொறுத்தவரையில், பரவலாக ஒரே மாதிரியான கல்வித்திட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும், எதிலும் மறுசீரமைப்பு அவசியம் என்பதால், அது தேவையானது தான் என்றார். பேட்டியின்போது அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Puducherry Huner Hot Exhibition ,Union Minister ,Mukthar Abbas Nakvi , Puducherry: The Union Minister for Minority Welfare, at the closing ceremony of the 36th Honor Hot Association Exhibition held in Puducherry yesterday.
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...