செய்யாறு நகராட்சியில் திமுக, பாமகவில் போட்டியிட்ட 2 தம்பதிகள் வெற்றி-ஒரு வாக்குகூட பெறாத நாதக வேட்பாளர்

செய்யாறு : செய்யாறு நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் பாமக சார்பில் போட்டியிட்ட 2 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒரு வாக்குகூட பெறவில்லை.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 17 வார்டுகள், காங்கிரஸ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலா 1, அதிமுக 3, பாமக 2, சுயேட்சை 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், செய்யாறு நகராட்சியில் திமுக மற்றும் பாமக சார்பில் போட்டியிட்ட 2 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, 18வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ.மோகனவேல், 13வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி மோ.பேபி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதேபோல், 12வது வார்டில் பாமக சார்பில் போட்டியிட்ட சீனிவாசன், 20வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி பத்மபிரியா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி என்பவர் 4வது மற்றும் 15வது வார்டு என 2 வார்டுகளில் போட்டியிட்டார். இதில் 15வது வார்டில் 12 வாக்குகள் கிடைத்தது. ஆனால், 4வது வார்டில் ஒருவாக்குகூட பெறவில்லை. அதேபோல், இவரது கணவர் பிரபு என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பில் 16வது வார்டில் போட்டியிட்டு 7 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: