புதுவையில் கடுமையான மூடுபனி-வாகன ஓட்டிகள் அவதி

புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று காலை 9 மணி வரை நீடித்த கடுமையான மூடுபனியால் வாகன ஓட்டிகள்  அவதிக்குள்ளாகினர்.புதுச்சேரியில்  சில மாதங்களுக்குமுன்பு வரலாறு காணாத மழை பெய்தது. புத்தாண்டுக்குபின் மழை ஓய்ந்த நிலையில் வெயில் கொளுத்தியது. மார்கழி மாதத்தில் கடுமையான குளிர்  இருந்த நிலையில் எதிர்பார்த்த அளவில் பனிப்பொழிவு எதுவும் இல்லாமல்  இருந்தது. இதனிடையே சில தினங்களாக புதுச்சேரியில் பனிப்பொழிவு  அதிகரித்துள்ளது. நேற்று கடுமையான புகை பனிமூட்டம் காணப்பட்டது.

 புகை  மண்டலம்போல் படர்ந்த பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை  எரியவிட்டபடி பயணித்தனர்.  காலை 9 மணி வரையிலும் பனி மூட்டம் நீடித்தது. அதேவேளையில் வாகன ஓட்டிகள்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும்  பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

Related Stories: