×

இங்கிலாந்து வீரர்கள் புகழ்ந்த 7 வயது கிரிக்கெட் வீராங்கனைகிரிக்கெட் வீராங்கனை

நன்றி குங்குமம் தோழி

கொரோனா  ஊரடங்கு மாணவ, மாணவிகளை பள்ளியில் இருந்து தொலைவில் வைத்திருந்தாலும் பல சாதனைகளை செய்யவும் தூண்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இதற்கு அரியானா மாநிலம், ரோத்தக்கை  சேர்ந்த 7 வயது சிறுமி பரி சர்மாவை உதாரணமாக கூறலாம். கடந்த சில வாரங்களுக்கு முன் பரி சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த அதிரடி கிரிக்கெட் விளையாடும் முறையை பார்த்து அசந்து போனார்கள் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன், மைக்கேல் வாகன், மைக் ஆதர்டன் உள்ளிட்டோர். இவர்கள் இந்த சிறுமியை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதுடன் அந்த சிறுமி விளையாடும் கிரிக்கெட் ஆட்டம் அடங்கிய வீடியோவை மறுடிவிட்டும் செய்துள்ளனர். இதற்கும் ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளன. அந்த வீடியோவில் கிரிக்கெட் பேட் உயரமே உள்ள அந்த 7 வயது சிறுமி பரி சர்மா ஸ்டம்புகளுக்கு முன் பேட்டுடன் காத்திருக்கிறார்.

வருகிற பந்தில் அவுட் ஆகப் போகிறார் என நாம் எதிர்பார்க்கும் வேலையில் அந்த சின்னஞ்சிறுமி லாவகமா பேட்டை சுழற்றி அடித்ததில் அந்த பந்து பவுண்டரியை தொடுகிறது. இதற்காக அவர் தனது வீட்டின் ஹாலையே மைதானமாக தேர்ந்தெடுத்துள்ளார். கயிறு ஒன்றில் கட்டப்பட்டுள்ள பந்து சுவரில் மோதி திரும்பி வருகிறது. அப்போது எதிரே தயாராக நிற்கும் பரி சர்மா பந்தை விளாசி பவுண்டரிகளாகவும் சிக்சராகவும் அடித்து நொறுக்குகிறார். இவரது பயிற்சியாளர்
அவரின் தந்தை பிரதீப் சர்மா.  காலை 5 மணிக்கு எழுந்து தந்தையுடன் பயிற்சியை தொடங்குகிறார் பரி சர்மா. அப்பா  வெளியே சென்றிருந்தால் கயிற்றில் கட்டப்பட்ட பந்து கொண்டு பயிற்சி எடுக்கிறாள். ‘‘அந்த பந்து சுவரில் மோதி வரும்போது எதிர்கொண்டு தாக்குவேன். மாலையிலும் இரவிலும் கூட கிரிக்கெட் தான் விளையாடுவேன். எனக்கு இந்திய வீரர்கள் கோலி மற்றும் டோனியின் அதிரடி ஆட்டம் பிடிக்கும். பெண்கள்அணியில் ஹர்மந்த் பிரித் கவுரின் ஸ்டைல் பிடிக்கும்’’ என்றார் மழலை மாறாமல் பரி.

‘பரியின் கிரிக்கெட் விளையாடும் முறையில் இருந்து சிலவற்றை நான் கற்றுக்கொண்டுள்ளேன்’ என பெருமிதம் பொங்க கூறுகிறார் இந்திய பெண்கள் அணியின் வீராங்கனை சிகா பான்டே . கிரிக்கெட் பிரபலங்கள் புகழும் அளவுக்கு அந்த சிறுமியிடம் என்ன பிடித்தது என்ற கேள்விக்கு வீரர்கள் அளித்த பதிலில் பரி பந்தை எதிர்நோக்கும் முறை, மணிக்கட்டை லாவகமாக பயன்படுத்தி பந்தை லெக் சைடு மற்றும் ஆப் சைடில் விரட்டும் முறை தான் அவர்களை கவர்ந்துள்ளது என்கின்றனர். பரியின் எதிர்கால லட்சியம் உலகத்தில் உள்ள மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் சாதித்துள்ள அத்தனை ரிக்கார்டுகளையும் முறியடிப்பதே. இதற்காக தன்னை விட மூத்த வயதுள்ள மாணவர்களுடன் தான் களத்தில் இறங்குகிறார் பரி சர்மா. வெற்றிக்கனியை பறிக்கும் காலத்தை விரைவில் எட்டுவார் என்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக பரியின் தந்தை பிரதீப் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : cricketer ,England ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது