×

நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது: 2 முறை தலைவர் பதவி வகித்த பாஜ படுதோல்வி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. நகராட்சியாக இருந்தபோது 2 முறை தலைவர் பதவி வகித்த பாரதிய ஜனதா கட்சி வெறும் 11 இடங்களை மட்டுமே பிடித்து படு தோல்வி அடைந்தது.
நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை, நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. தொடக்கம் முதலே திமுக வேட்பாளர்கள் அதிக இடங்களை கைப்பற்றினர். திமுக  கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றது.

மொத்தம் உள்ள 52 வார்டுகளில் திமுக 24 இடங்களை பிடித்துள்ளது. காங்கிரஸ் 7 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே  இங்கு திமுக மேயர் பதவியை கைப்பற்றுகிறது. மாநகராட்சியான பின் நடைபெற்ற முதல் உள்ளாட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்தவர் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்க இருப்பது, திமுகவினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

2001 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மீனாதேவ் வெற்றி பெற்று நகராட்சி தலைவர் ஆனார். 2011 ல் அதிமுகவுடன் கூட்டணியில் மீண்டும் பாஜ வெற்றி பெற்று மீனாதேவ் தலைவர் ஆனார். இந்த முறை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதால், நிச்சயம் நாகர்கோவில் மாநகராட்சியை கைப்பற்றி விடலாம் என அந்த கட்சியினர் எண்ணி இருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணம் தவிடுபொடியானது. அதிக இடங்களில் வெற்றி பெற்று, திமுக மேயர் பதவியை கைப்பற்றுகிறது. இந்த தோல்வி பாரதிய ஜனதாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நாகர்கோவில் மாநகராட்சி பாரதிய ஜனதா கோட்டை என அந்த கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் அந்த எண்ணம், உள்ளாட்சி தேர்தலில் தகர்த்து எறியப்பட்டது. பாரதிய ஜனதா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட வார்டுகளில் கூட திமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக  படுதோல்வி:  நாகர்கோவில் மாநகராட்சியில் அதிமுகவும் படுதோல்வி அடைந்துள்ளது. 52 வார்டுகளில் போட்டியிட்ட அந்த கட்சி, 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதிலும் ஒரு இடம் கூட்டணி கட்சியான த.மா.கா. பெற்றுள்ளது.

* அண்ணனை வீழ்த்திய தம்பி; அண்ணியை தோற்கடித்த மைத்துனி
நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டில் அதிமுக சார்பில் நாகராஜன் போட்டியிட்டார். திமுக சார்பில் அவரது சகோதரரான சுப்ரமணியம் என்ற சுரேஷ் களம் இறங்கினார். இதில் சுப்ரமணியம் வெற்றி பெற்று தனது அண்ணனை வீழ்த்தியுள்ளார். இதே போல் 11 வது வார்டில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில், அதிமுகவை தோற்கடிக்க பாரதிய ஜனதா நாஞ்சில் முருகேசனின் மருமகள் திவ்யாவை களமிறக்கியது. மேலும் அவரது மகனையும் தந்தை, தங்கைக்கு எதிராக பிரசாரத்தில் இறக்கியது. ஆனால் பாஜ வேட்பாளர் திவ்யா தோல்வி அடைந்தார்.


Tags : Nagargo ,Tamuka ,Paja Padu , DMK seizes Nagercoil corporation: BJP leader Badu defeated 2 times
× RELATED சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத்...